வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தமிழக மின் வாரியத்தில், மூன்று மாதங்களில், 97 'கேங்மேன்'கள் உயிர் இழந்துள்ளதாக, பாரதிய மஸ்துார் சங்க மாநில பொதுச் செயலர் முரளி கிருஷ்ணன் கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
திருவாரூர் மாவட்டம், திருக்குவளை அருகே உள்ள ஆலம்பாடியை சேர்ந்தவர் சிவசங்கர், 28. இவர் ஈரோடு மாவட்டம், பெருந்துறை மின் வாரியத்தில் கேங்மேனாக வேலை செய்து வந்தார். கடந்த 21ல், பெருந்துறை மருத்துவமனை அருகே, மின் வழித்தடத்தை மாற்றி விடுவதற்காக, மின் கம்பத்தில் ஏறினார்.
அப்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இதே மாதிரி தமிழகம் முழுதும் பல சம்பவங்கள் நடக்கின்றன. இதற்கு சரியான புள்ளி விபரங்கள் இல்லை என்றாலும், கடந்த ஆண்டு ஜனவரியில் இருந்து மார்ச் வரை, மூன்று மாதங்களில் மட்டும், 97 கேங்மேன்கள் இறந்துள்ளதாக தெரிகிறது.
![]()
|
மின் கம்பங்களை புதைப்பது மற்றும் அவற்றில் மின் ஒயர்களை இழுத்து கட்டும் பணிகளை மட்டும்தான், அவர்கள் மேற்கொள்ள வேண்டும். ஆனால், அவர்கள் 'போர்மேன், லைன்மேன்' பார்க்க வேண்டிய பணிகளையும் செய்து வருகின்றனர். அவர்களில் பலர், எழுத்து பணியையும் செய்கின்றனர்.
அ.தி.மு.க., ஆட்சியில் கேங்மேன் பணிக்கு 9,000 பேர் நியமிக்கப்பட்டனர். அவர்களை எக்காரணம் முன்னிட்டும், மின் கம்பத்தில் ஏற்றி பணி செய்ய விடக் கூடாது என, அதிகாரிகள் வாய்வழியாக உத்தரவு போட்டுள்ளனர். இருந்தும், அவர்களைதான் மின் கம்பங்களில் ஏறி பணி செய்ய, கீழ்நிலை அதிகாரிகள் அனுப்புகின்றனர்.
மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மரில் ஏறி வேலை பார்க்க வேண்டும் என்றால், பல கட்டுப்பாடுகள் உள்ளன. அதை எதையுமே பின்பற்றுவதில்லை. மின் கம்பங்களில், டிரான்ஸ்பார்மர்களில் ஏறி பணி செய்ய வேண்டும் என்றால், உரிய பாதுகாப்பு கவச கருவிகளை அணிய வேண்டும். அதை வாரியம் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்; முறையான பயிற்சி கொடுக்க வேண்டும். ஆனால், இதில் எதையுமே செய்வதில்லை. அதனாலேயே விபத்துக்கள் அதிகமாகின்றன.
தங்கள் எச்சரிக்கையை மீறி, தன்னிச்சையாக மின் கம்பங்களில் ஏறி பணியாற்றி உள்ளனர் என கூறி, உயர் அதிகாரிகள் தங்களை காப்பாற்றி கொள்கின்றனர்.
விபத்தில் கேங்மேன் இறந்தால், அவர்களுக்கு இழப்பீடு வழங்க முடிவதில்லை. அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை அளிக்காமலும் இருந்தனர். நாங்கள் போராடி, அதை செய்து கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறோம் என்றார்.
- நமது நிருபர் -