திருவாடானை : ஹீரோ ஆக ஆசைப்படும் மாணவர்களே போதைக்கு அடிமையாகுகிறார்கள் என்று திருவாடானை டி.எஸ்.பி., நிரேஷ் பேசினார்.
திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. முதல்வர் மாதவி தலைமை வகித்தார். ஆங்கிலத்துறை தலைவர் மணிமேகலை வரவேற்றார். திருவாடானை டி.எஸ்.பி.,நிரேஷ் பேசியதாவது:
போதை பொருட்களுக்கு அடிமையாகும் மாணவர்களின் வாழ்க்கை வீணாகிவிடும். மாணவர்கள் மட்டுமல்ல அவர்களை நம்பி வாழும் குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். ஏன் இந்த பழக்கத்திற்கு மாணவர்கள் அடிமையாகிறார்கள் என்று ஆராய்ந்தால், ஹீரோவாக காட்டிக்கொள்ள வேண்டும் என்ற ஆசையால் தான் பெரும்பாலான மாணவர்கள் போதைக்கு அடிமையாகிறார்கள்.
நமது நடவடிக்கையை பார்த்து மற்றவர்கள் வியப்படைய வேண்டும் என்று தான் மாணவர்கள் போதைக்கு அடிமையாகிறார்கள். இப்படி ஹீரோ ஆக விரும்பும் மாணவர்களின் வாழ்க்கை கடைசியில் ஜீரோ ஆகிவிடும். படித்து வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றுபவர் தான் உண்மையான ஹீரோ, என்றார்.
ராமநாதபுரம் போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலர் பெரிய கருப்பன் தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். தமிழ்த்துறை தலைவர் பழனியப்பன் நன்றி கூறினார். மாணவர்களின் மனித சங்கிலி நடந்தது.