வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழகத்தில் சுற்றுச்சுவருடன் கூடிய உள்ளரங்கு நிகழ்வாக, ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பை நடத்துமாறு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு மனுக்கள் மீதான தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல், சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
தமிழகம் முழுதும் 50இடங்களில், ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் தரப்பில் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், நிபந்தனைகளுடன் அணிவகுப்புக்கு அனுமதி வழங்க, போலீசாருக்கு உத்தரவிட்டது.
ஆனால், சட்டம்- - ஒழுங்கு பிரச்னையை காட்டி, அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் தரப்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டன.
![]()
|
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'கோவை, நாகர்கோவில் உள்பட ஆறு இடங் களை தவிர, 44 இடங்களில், சுற்றுச்சுவருடன் இருக்கும் உள்ளரங்கு நிகழ்வாக, அணிவகுப்பை நடத்தலாம்' என்ற, நிபந்தனையுடன் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷபீக் அடங்கிய அமர்வில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, ஆர்.எஸ்.எஸ்., தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் என்.எல்.ராஜா, ஜி.ராஜகோபாலன், குப்தா ரவி, ஜி.கார்த்திகேயன் ஆகியோர் ஆஜராகி, 'நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அணிவகுப்புக்கு அனுமதியளித்த உத்தரவை மாற்றியமைத்தது தவறு என்பதால், இந்த மேல்முறையீடு வழக்கு விசாரணைக்கு உகந்தது.
'பிற அமைப்புகளுக்கு போராட்டம் நடத்த அனுமதித்தது பாரபட்சமானது' என வாதிட்டனர்.
அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, ''அணி வகுப்பு நடத்தப்படாது என ஆர்.எஸ்.எஸ்., தெரிவித்த நிலையில், இந்த மேல்முறையீடு வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. உளவுத் துறை அறிக்கையின்படி, காவல் துறை செயல்பட்டு உள்ளது. அணிவகுப்புக்கு முறையாக விண்ணப்பித்தால், காவல் துறை அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் பரிசீலித்துஉத்தரவு பிறப்பிப்பர்,'' என்றார்.
மேல்முறையீட்டு வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.