மதுரை: வருவாய்த் துறையில் தலையாரிகள் பணிநியமனம் எப்போது
அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் மதுரை மாவட்டத்தில் எழுத்து,
நேர்முகத்தேர்வு முடித்தவர்கள் காத்திருக்கின்றனர். முறைகேடாக தேர்வு
செய்யப்பட்டவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர்கள் (தலையாரிகள்) காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்து 2022 டிசம்பர் முதல்வாரம் எழுத்துத் தேர்வு நடத்தியது.
பின்பு டிச.25 முதல் 2023, ஜன.10 வரை மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாக்களிலும் நேர்முகத் தேர்வு நடந்தது. மதுரை மாவட்டத்தில் 209 பணியிடங்களுக்கு 13 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
அந்தந்த பகுதியை சேர்ந்தவர்கள், எழுதப்படிக்க தெரிவது, சைக்கிள் ஓட்டத் தெரிந்து இருப்பது என்ற தகுதியில் நேர்காணல் நடந்தது. இந்த நியமனத்தில் அரசியல் தலையீடு அதிகம் இருப்பதாக விண்ணப்பதாரர்கள் புலம்பினர்.
ஆளும்கட்சியினரை நியமிக்க கட்சியின் மேலிடம் சிக்னல் கொடுத்தது. இருப்பினும் மாவட்டங்களில் ஆளும்கட்சியினர் ஒரு பணியிடத்திற்கு ரூ.5 லட்சம் முதல் 6 லட்சம் வரை விற்பனை செய்தனர். தாங்கள் தேர்வு செய்வோரை பணியில் அமர்த்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர்.
மதுரை மாவட்ட நிர்வாகம் ஒப்புக்கொள்ளாததால் ஆளும்கட்சியினரோடு கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. ஒரே குடும்பத்தில் 2 பேருக்கு பணியிடம் வழங்கியது, முகவரி மாற்றம் உட்பட சில முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
தகுதியானவரை தேர்வு செய்ய வேண்டும் என கலெக்டர் அனீஷ்சேகர் உத்தரவிட்டார். வருவாய் அலுவலர்களை அழைத்து, முறைகேடு தெரிந்தால் சஸ்பெண்ட் செய்வதாகவும் எச்சரித்தார். இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக திருமங்கலம் பொறுப்பு ஆர்.டி.ஓ., சவுந்தர்யா அப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதனால் அரசியல் புள்ளிகளுக்கு அடிபணிவதா, அதிகாரிகள் சொல்வதை கேட்பதா எனத்தெரியாமல் வருவாய் அலுவலர்கள் தவிக்கின்றனர்.
இதற்கிடையே நேர்முகத் தேர்வில் தேர்வானோரின் விவரங்களை தரும்படி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதனை ஆய்வு செய்து பட்டியல் அறிவிக்கப்பட உள்ளது. பல மாவட்டங்களில் தேர்வு பட்டியல் பிரச்னையின்றி வெளியான நிலையில், மதுரையில் இதனால் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஓரிருநாட்களில் தேர்வு பட்டியல் வெளியாகும் என வருவாய் அலுவலர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement