கடலுார் : முன்விரோத தகராறு தொடர்பான வழக்கில், விவசாயிக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கடலுார் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
நெல்லிக்குப்பம் அடுத்த பெரிய நரிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரகுராமன், 70; ராமகிருஷ்ணன், 33. இருதரப்புக்கும், இடப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் ஏற்பட்டு, கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி, தாக்கிக் கொண்டனர்.
நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து இருதரப்பையும் சேர்ந்த ராமகிருஷ்ணன், இவரது அண்ணன் ராமர், 40; ரகுராமன், இவரது மனைவி சிவபாக்கியம், 60; இவரது தரப்பைச் சேர்ந்த ராமதாஸ் மனைவி அமுதா, 35; ஆகியோரை கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை, கடலுார் மாஜிஸ்திரேட் கோர்ட் எண் 1ல் நேற்று முடிந்து, நீதிபதி வனஜா தீர்ப்பு கூறினார். இதில், ராமகிருஷ்ணனுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை, 3,000 ரூபாய் அபராதம், ரகுராமனுக்கு, 2,000 ரூபாய் அபராதம், சிவபாக்கியம், அமுதாவிற்கு தலா 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ராமர் விடுவிக்கப்பட்டார்.