புதுச்சேரி : குடியரசு தினத்தை முன்னிட்டு, கடற்கரை சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து எஸ்.பி., மாறன் கூறியதாவது:
நாட்டின் 74வது குடியரசு தின விழா புதுச்சேரி அரசு சார்பில் நாளை கடற்கரை சாலை காந்தி சிலை அருகே நடக்கிறது.
விழாவிற்கு வருவோரின் வசதிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு்ளளது. மேலும், தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கடற்கரை சாலையில் வடக்கு பகுதி வழியாக விழாவிற்கு வரும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பங்கேற்பாளர்களின் வாகன நிறுத்தும் அனுமதி பெற்றவர்கள் பழைய சாராய ஆலை வழியாகவும், ஹோட்டல் பிரமனைட் வழியாக வந்து, வாகனங்களை விழா பந்தலின் வடக்கு பகுதியில் கடற்கரை ரோட்டில் கிழக்கு பகுதியில் நிறுத்த வேண்டும்.
மற்றவர்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை கொம்பாங்கி வீதி, செயின் மார்ட்டின் வீதி மற்றும் லா தி லோரிஸ்தான் வீதியில் நிறுத்திவிட்டு நடந்து வர வேண்டும்
தெற்குபகுதி வழியாக வரும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பங்கேற்பாளர்களின் வாகன நிறுத்தும் அனுமதி பெற்றவர்கள் புஸ்சி வீதி வழியாக வந்து, வாகனங்கைள பந்தலின் தெற்கு பகுதியில் கடற்கரை ரோட்டில் கிழக்கு பகுதியில் நிறுத்த வேண்டும்.
மற்றவர்கள் இருசக்கர வாகனங்களை சுய்ப்ரென் வீதியில் வர்த்தக சபை அருகில் நிறுத்திவிட்டு, நடந்து வர வேண்டும்.
விழா அணிவகுப்பில் பங்கேற்பவர்கள் தங்களின் இருசக்கர வாகனங்களை ரோமன் ரோலண்ட் வீதி, கஸ்ரேன் வீதி, சர்கூப் வீதி மற்றும் துமாஸ் வீதியில், புஸ்சி வீதியில் இருந்து தெற்கு நோக்கி பழைய துறைமுகம் வரை நிறுத்தலாம்.
பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையினர் தங்கள் இருசக்கர வாகனங்களை பாரதி பூங்கா அருகில் உள்ள பெருமாள் கோவில் முன்புறத்தில் நிறுத்த வேண்டும்.
லாயிஸ் வீதி, துய்மாஸ் வீதியில் 'லீ கபே' சந்திப்பில் இருந்து, பழைய நீதிமன்றம் சந்திப்பு வரையிலும், புஸ்சி வீதி பழைய சட்டக் கல்லுாரி சந்திப்பில் இருந்து கடற்கரை சாலை சந்திப்பு வரையிலும்,மாகே லபோர்தன வீதி, செயிண்ட் ஆஞ்ஜி வீதியில் ஆம்பூர் சாலை சந்திப்பில் இருந்து விக்டர் சிமோனல் வீதியில் அரசு மருத்துவமனை சந்திப்பில் இருந்து ரங்கப்பிள்ளை வீதி வரையில் எந்த வாகனங்களும் நிறுத்த அனுமதி கிடையாது என்றார்.