புதுச்சேரி : ரேஷன் கடைகளை திறக்க வலியுறுத்தி பெண்கள் கூட்டமைப்பின் சார்பில் வரும் பிப்ரவரி 2ம் தேதி குடிமை பொருள் வழங்கல் அலுவலத்தை முற்றுகையிடப்படும் எனஅனைத்துப் பெண்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இது குறித்து ஜனநாயக மாதர் சங்கத் தலைவர் முனியம்மாள் கூறியதாவது:
அனைத்துப் பெண்கள் கூட்டமைப்பு சார்பில் கடந்த 2020 ம் ஆண்டு பொதுமக்களிடம் கருத்து கேட்டு, அரிசிதான் வேண்டும். பணம் வேண்டாம் என அப்போதைய கவர்னர் கிரண்பேடியிடம் மனு கொடுத்தோம். அதனடிப்படையில் மூன்று மாதம் அரிசி வழங்கப்பட்டது. இது படிப்படியாக குறைந்து புதுச்சேரி முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூடப்பட்டது.
இதனை எதிர்த்து பலகட்ட போராட்டங்களை கூட்டமைப்பு நடத்தியது. அதனையொட்டி, குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் கடந்தாண்டு ஆக்டோபர் 24ம் தேதி அன்று ரேஷன் கடைகள் திறக்கப்படும் என அறிவித்தார்.
முதல்வரை பெண்கள் முற்றுகையிட்டு கேட்டபோது, ரேஷன் கடைகள் திறக்கப்படும் என்றார். இந்நிலையில் பொங்கல் பரிசு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்றனர். பின்னர் அங்கன்வாடி என்றனர்.
ஆனால் இறுதியாக இலவசபொருள் போடும் முடிவு ரத்து செய்து ரூ.500 பணத்தை பயனாளிகளின் வங்கி கணக்கில் சேர்க்கப்படும் என்றனர்.
கவர்னர் தமிழிசை ரேஷன் கடைகளை திறக்க வாய்ப்பில்லை என கூறியுள்ளார். மதுபான கடைகளை திறக்க அனுமதி அளிக்கும் கவர்னருக்கு ரேஷன் கடையை திறப்பதற்கு முடியவில்லை.
ரேஷன் கடையை திறக்க வலியுறுத்தி வரும் பிப்ரவரி 2ம் தேதி அனைத்துப் பெண்கள் கூட்டமைப்பு சார்பாக குடிமைப்பொருள் வழங்கல் அலுவலகத்தை முற்றுகையிடப்படும் என்றார்.