புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபையில் வரும் மார்ச் மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடரில், மாநில அந்தஸ்து தீர்மானம் கொண்டு வரப்படும் என முதல்வர் ரங்கசாமி கூறினார்.
மாநில அந்தஸ்து தொடர்பாக சிறப்பு சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டி நேரு எம்.எல்.ஏ., தலைமையில் சமூக அமைப்பினர் முதல்வர் ரங்கசாமியிடம் மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து என்பது வருங்காலத்தில் முதல்வராக வரக்கூடியவர்களுக்காகவும் கேட்கப்பட்டு வருகிறது. ஆகவே, மாநில அந்தஸ்து என்பது நமது கொள்கையாகவே உள்ளது. அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மாநில அந்தஸ்து குறித்து வரும் மார்ச் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் தீர்மானம் கொண்டு வரப்படும். ஏற்கெனவே மாநில அந்தஸ்து கோரி பல முறை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் கொண்டு வரப்பட்டு, தீர்மானம் மீது அனைத்து எம்.எல்.ஏ.,க்களின் கருத்தை பதிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றார்.