சின்னமனூர் :வெற்றிலை வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரிக்க துவங்கியுள்ளது.
தேனி மாவட்டத்தில் சின்னமனூர், சீலையம்பட்டி, மார்க்கையன்கோட்டை, கம்பம், கூடலூர், பெரியகுளம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி உள்ளிட்ட பல ஊர்களில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது.
கறுப்பு வெற்றிலை சின்னமனூர் பகுதியிலும், வெள்ளை வெற்றிலை பெரியகுளம் பகுதியில் சாகுபடியாகிறது.
வழக்கமாக தை மாதம் புது கொடிக்கால்களில் இருந்து வெற்றிலை வரத்து இருக்கும்.
ஆனால் சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையும், தற்போது நிலவும் பனிப்பொழிவு சீதோஷ்ண நிலை மாற்றத்தால் புது கொடிக்கால்களில் இருந்து வெற்றிலை வரத்து துவங்கவில்லை. இதனால் வெற்றிலை தட்டுப்பாடு உள்ளது. கறுப்பு வெற்றிலை கிலோ ரூ.160 ல் இருந்து ரூ.190 ஆகவும், வெள்ளை வெற்றிலை கிலோ ரூ. 230 ல் இருந்து ரூ.260 ஆக உயர்ந்துள்ளது. சின்னமனூர் முன்னோடி வெற்றிலை விவசாயி ரவி கூறுகையில், புது கொடியில் இருந்து சில வாரங்களில் வெற்றிலை வரத்து துவங்கும்.
தை மாதம் என்பதால் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதாலும் வெற்றிலைக்கு விலை கிடைத்து வருகிறது'' என்றார்.