சென்னை: சென்னை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழாவுக்கு, அமைச்சர் உதயநிதி தாமதமாக வந்ததால், மாணவ - மாணவியர் ஒரு மணி நேரம் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை மாநகராட்சி ஆகியவை இணைந்து நடத்தும், மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள், நேற்று சென்னையில் துவங்கின. சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள, மே தின பூங்கா விளையாட்டு மைதானத்தில், கால்பந்து, கபடி, இறகு பந்து போட்டிகளை, அமைச்சர் உதயநிதி, நேற்று காலை துவக்கி வைத்தார். அதேபோல், தியாகராய நகர் நடேசன் பூங்கா எதிரில் உள்ள கண்ணதாசன் மைதானத்தில், கூடைப்பந்து, சிலம்பம் மற்றும் சதுரங்க போட்டிகளையும், நேற்று காலை 10:30க்கு அமைச்சர் உதயநிதி துவக்கி வைப்பார் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.
விழாவில் பங்கேற்க, காலை 9:00 மணிக்கு, மாணவ - மாணவியர் அழைத்து வரப்பட்டு அமர வைக்கப்பட்டனர். ஆனால், அமைச்சர் காலை 11:45 மணிக்கு வந்தார். அதுவரை மாணவ - மாணவியர் வெயலில் காத்திருந்தனர். சதுரங்க போட்டியை துவக்கி வைத்துவிட்டு, வேகமாக சென்று விட்டார் உதயநிதி. அமைச்சர் முன்னிலையில், தன் சிலம்பாட்ட திறமையை காண்பிப்பதற்காக, மாற்றுத்திறனாளி வீரர் ஒருவர் காத்திருந்தார்; அவர் ஏமாற்றம் அடைந்தார்.