புதுடில்லி:குடியரசு தின விழாவை முன்னிட்டு, தலைநகர் புதுடில்லியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, புதுடில்லி மாநகர போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
குடியரசு தின அணிவகுப்பு விஜய் சவுக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கி செங்கோட்டை நோக்கி செல்லும். கர்தவ்ய பாதை, சுபாஷ் சந்திரபோஸ் ரவுண்டானா, திலக் மார்க், பகதுார்ஷா ஜாபர் மார்க், நேதாஜி சுபாஷ் மார்க் வழியாக சென்று செங்கோட்டையை அடையும்.
கர்தவ்ய பாதையில் விஜய் சவுக்கில் இருந்து இந்தியா கேட் வரையிலும், ரபி மார்க், ஜன்பத், மான்சிங் சாலையில் அணிவகுப்பு முடியும் வரை கர்தவ்ய பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு மாற்று வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மந்திர் மார்க் நோக்கிச் செல்பவர்கள் மதர்சா, லோதி சாலை, டி-பாயின்ட் வழியாக அரவிந்தோ மார்க், எய்ம்ஸ் சவுக், ரிங் ரோடு, தவுலா கான், வந்தே மாதரம் மார்க், சங்கர் சாலை வழியாக செல்லலாம்.
தெற்கு டில்லியில் இருந்து புதுடில்லி ரயில் நிலையம் செல்பவர்கள் தவுலா குவான், வந்தே மாதரம் மார்க், பஞ்சகுயன் சாலை, கன்னாட் பிளேஸ் வெளிவட்டம், பஹர்கஞ்ச், செல்ம்ஸ் போர்ட் சாலை அல்லது அஜ்மேரி கேட் அருகில் உள்ள மிண்டோ சாலை மற்றும் பவ்பூதி மார்க் வழியாக செல்லலாம்.
கிழக்கு டில்லியில் இருந்து பவுல்வர்டு சாலை வழியாக ஐ.எஸ்.பி.டி., பாலம், ராணி ஜான்ஸி மேம்பாலம், ஜாண்டேவாலன் ரவுண்டானா, டி.பி., குப்தா சாலை, ஷீலா சினிமா சாலை, பஹர்கஞ்ச் பாலம் வழியாக புது டில்லி ரயில் நிலையத்தை அடையலாம்.
தெற்கு டில்லியில் இருந்து பழைய டில்லி ரயில் நிலையம் செல்ல ரிங் ரோடு, ஆஷ்ரம் சவுக், சராய் காலேகான், ராஜ்காட், யமுனா பஜார், எஸ்.பி. முகர்ஜி மார்க், சட்டா ரயில் மற்றும் கவுரியா பாலம் வழியாக செல்லலாம்.
குடியரசு தின விழாவுக்கு அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள், கர்தவ்ய பாத் வருவதற்கு சொந்த வாகனங்களை தவிர்த்து மெட்ரோ ரயிலை பயன்படுத்தலாம்.
மத்திய செயலகம் மற்றும் உத்யோக் பவன் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணியருக்கு அனுமதி கிடையாது. குடியரசு தின அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள் மட்டும் இந்த நிலையங்களில் காலை 5:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக, புதுடில்லி மாநகர் மற்றும் புறநகரில் பாரா- கிளைடர், பாரா மோட்டார், ஹேங் கிளைடர், மைக்ரோலைட் விமானம், ரிமோட் பைலட் விமானம், ஹாட் ஏர் பலுான், ஆளில்லா குட்டி விமானம், குவாட்காப்டர் அல்லது விமானத்தில் இருந்து பாரா ஜம்பிங் போன்ற வான்வழி தளங்களில் பறப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த தடை பிப்.,15 வரை நீடிக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தலைநகர் டில்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போலீஸ் மற்றும் ராணுவம் பாதுகாப்பு பணிகளை கவனித்து வருகின்றன. மாநகர் முழுதும் 6,000 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்காக 24 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.சமூக ஊடகங்கள் வாயிலாகவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. சந்தேக நபர்கள், செயல்பாடு அல்லது பொருட்கள் குறித்து உடனே தகவல் அளிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளின் இலக்காக புதுடில்லி இருப்பதால், மற்ற பாதுகாப்பு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தலைநகருக்குள் பயங்கரவாதிகள் நுழையாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, எல்லைகளில் கூடுதல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பஸ் நிலையம், மெட்ரோ ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் 65 ஆயிரம் பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அழைப்பிதழ் மற்றும் அனுமதி அட்டையில் 'க்யூ ஆர்' குறியீடு பொறிக்கப்பட்டுள்ளது. விழா நடக்கும் இடத்தில் 150க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றில் முக அடையாளம் காணும் அமைப்பும் உள்ளன. மத்திய டில்லியில் உயரமான கட்டடங்களில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.