புதுடில்லி:ஆஸ்திரேலியாவில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், புதுடில்லியில் கைது செய்யப்பட்ட இளைஞரை நாடு கடத்த புதுடில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்திய வம்சாவளியான ராஜ்விந்தர் சிங், 38, மனைவி குழந்தைகளுடன் ஆஸ்திரேலியாவில் வசித்தார். அங்கு, ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்தார். கடந்த 2018ம் ஆண்டு குயின்ஸ்லாந்து கடற்கரையில் டோயா கார்டிங்லி,24 என்ற பெண்ணை கொலை செய்து விட்டு, இந்தியாவுக்கு தப்பி வந்து விட்டார்.
ராஜ்விந்தர் சிங்கை பிடித்துக் கொடுப்போருக்கு ஆஸ்திரேலிய அரசு ஐந்து கோடி ரூபாய் பரிசுத் தொகையை கடந்த ஆண்டு நவம்பர் 4ல் அறிவித்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 25ல், புதுடில்லி ஜி.டி.கர்னச் சாலையில் ராஜ்விந்தர் சிங்கை, டில்லி போலீசார் கைது செய்தனர். டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சிங் மீது, புதுடில்லி பெருநகர கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. ராஜ்விந்தர் சிங்கை ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்த, மாஜிஸ்திரேட் ஸ்வாதி ஷர்மா உத்தரவிட்டார்.