நுங்கம்பாக்கம், செல்லப் பிராணிகளை, 'ஆன்லைனில்' பதிவு செய்யும் திட்டத்தை, வரும் பிப்ரவரியில் செயல்படுத்த உள்ளதாக, மாநகராட்சி கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நுங்கம்பாக்கம், கண்ணம்மாபேட்டை உள்ளிட்ட நான்கு இடங்களில், மாநகராட்சி சார்பில் செல்லப் பிராணிகள் மருத்துவமனை செயல்படுகிறது.
இங்கு நாய், பூனை, பறவை உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, நாய் மற்றும் பூனைகளுக்கான தடுப்பூசி மற்றும் செல்லப் பிராணிகள் வளர்ப்பு குறித்து ஆலோசனையும் வழங்கப்பட்டு வருகிறது.
செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்கள், கணிசமான அளவில் இந்த மையங்களில் பிராணிகளுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு சிகிச்சைக்கு வருபவர்கள் மற்றும் உரிமம் பெற்றவர்களை கொண்டு, செல்லப் பிராணிகள் குறித்த கணக்கீடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை, 1,500 பிராணிகள் மட்டுமே வளர்க்கப்பட்டு வருவதாக, கணக்குகள் தெரிவிக்கின்றன. ஆனால், இதை விட கூடுதலாகவே, மாநகரில் செல்லப் பிராணிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
அதனால், மாநகரில் வளர்க்கப்படும் மொத்த செல்லப் பிராணிகளை கணக்கெடுத்து, சென்னை மாநகராட்சி வரைமுறைப்படுத்த உள்ளது. இதற்காக, மாநகராட்சி ஆன்லைனில், செல்லப் பிராணிகளை பதிவு செய்யும் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது.
இது குறித்து மாநகராட்சி கால்நடை மருத்துவர் ஒருவர் கூறியதாவது:
மாநகரில் வளர்க்கப்படும் மொத்த செல்லப் பிராணிகள் பற்றிய விவரங்கள் தெரிந்தால், அதற்கான நோய் தடுப்பு முறைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் நடவடிக்கை மேற்கொள்ள எளிதாக இருக்கும்.
அதனால், செல்லப் பிராணிகளை ஆன்லைனில் பதிவு செய்யும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வரும் பிப்ரவரியில் இதை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.