காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், நேற்று, 2.85 கோடி ரூபாய் வேலைக்கான டெண்டருக்கு முன்கூட்டியே ஒப்பந்ததாரர்கள் நியமித்து விண்ணப்பம் செய்து விட்டனர்.
மற்றவர்கள் விண்ணப்பம் செய்ய விடாமல் தடுப்பதற்காக வெளி நபர்கள் பாதுகாப்புடன் நடந்ததால் மாநகராட்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், 'துாய்மை இந்தியா திட்ட'த்தின் கீழ் நான்கு இடங்களில் வள மீட்பு மையம் கட்டுவதற்கு தலா 42.50 லட்சம் வீதம் 1.70 கோடி ரூபாய்க்கும், இரு இடங்களில் குப்பை உரமாக்கும் மையம் கட்டுவதற்கு 1.15 கோடி ரூபாய் என, மொத்தம் 2.85 கோடி ரூபாய் செலவில் ஆறு வேலைகளுக்கு நேற்று டெண்டர் விடப்பட்டது.
இந்த வேலைக்கு 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான முன் வைப்பு தொகை மாநகராட்சியில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் வங்கி வரைவோலை செலுத்த வேண்டும்.
இந்த ஆறு வேலைகளுக்கும் முன்கூட்டியே ஆறு ஒப்பந்ததாரர்கள் நியமித்து அவர்கள் மட்டும் விண்ணப்பம் செய்துள்ளனர்.
வேறு யாராவது விண்ணப்பம் செய்ய விடாமல் தடுக்கும் வகையில் நேற்று காலையில் இருந்து, மதியம் 3:00 மணி வரை ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதாரவானவர்களை அங்கேயே தங்க வைக்கப்பட்டனர்.
மேலும், வெளி நபர்கள்சிலரும் மாநகராட்சிக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கும்பல், கும்பலாக மாநகராட்சியில் இருந்தனர்.
இதனால் மாநகராட்சிக்கு சென்ற பொது மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.
ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கவுன்சிலர்கள் சிலர் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு மதியம் பிரியாணி வழங்கப்பட்டன.
கடந்த ஆட்சியில் நகராட்சி வேலைகளுக்கான டெண்டரில் இது போன்று பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் எந்த சம்பவமும் நடக்கவில்லை.
எதிர் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அவர்களுக்குள் பேசி வேலையை பகிர்ந்து கொள்வார்கள்.
தற்போது பொது இடத்தில் மக்கள் வரிப்பணத்தில் நடக்கும் பணிக்கு இவ்வளவு பாதுகாப்புடன் டெண்டர் விடப்பட்டது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வேலைக்கு ஒப்பந்தம் பெறப்பட்டவர்கள் 20 சதவீதம் பணம் முன்கூட்டியே கமிஷன் கொடுத்து விட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் வேலை வழங்கப்பட்டு உள்ளதாக ஒருவர் தெரிவித்தார்.