சென்னை: 'அனைத்து கிராம ஊராட்சி அலுவலகங்களிலும், இன்று ஊராட்சி தலைவர்கள் தேசியக் கொடிஏற்ற வேண்டும்; கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும்' என, ஊரக வளர்ச்சித்துறை செயலர் அமுதா தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக் குறிப்பு: குடியரசு தினத் திருநாளில், சுதந்திரத்திற்காக உழைத்த, நம் முன்னோரின் தியாகத்தை நினைவு கூர்ந்து, ஊராட்சி அலுவலகங்களில், தேசியக் கொடி ஏற்ற வேண்டும். ஊராட்சிகளில் தலைமை பொறுப்பு வகிக்கும், ஊராட்சி தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்.
குடியரசு தினமான இன்று காலை, 11:00 மணிக்கு, அனைத்து ஊராட்சிகளிலும், கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும். கூட்டம் நடக்கும் இடம், நேரம் ஆகியவை, ஊராட்சி அலுவலக தகவல் பலகையில் வெளியிடப்பட்டு உள்ளது. கூட்டத்தில், கடந்த டிசம்பர் வரையிலான வரவு - செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், கிராம ஊராட்சியின் கடந்த ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை வைக்கப்பட வேண்டும்.
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் அரசு திட்டங்கள் குறித்து, கூட்டத்தில் விவாதிக்க வேண்டும். கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு, அமுதா தெரிவித்துள்ளார்.