மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் நாட்டின் 74 ஆவது குடியரசு தினம் பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. இந்நிலையில் மயிலாடுதுறையில் நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு மேல்நிலைப் பள்ளிகள் அமைந்துள்ளன.
பள்ளிகளில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே கொடியேற்ற வேண்டும் என்ற அரசின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு, திமுகவைச் சேர்ந்த நகர்மன்ற தலைவர் செல்வராஜ் என்பவருக்காக காலை முதலே பள்ளி மாணவ மாணவிகள் காக்க வைக்கப்பட்டனர்.
காலை ஏழு முப்பது மணிக்கு எல்லாம் பசியுடன் வந்திருந்த மாணவச் செல்வங்களை பற்றி கவலைப்படாமல் ஒவ்வொரு நிகழ்ச்சியாக நிறைவு செய்து இறுதியாக நகராட்சி பள்ளிகளுக்கு நகர மன்ற தலைவர் வருகை புரிந்தார். பத்தரை மணிக்கு நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும், 10. 50 மணிக்கு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும் நகர் மன்ற தலைவர் செல்வராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். மூன்று மணி நேரமாக காத்திருந்த மாணவச் செல்வங்கள் இதனால் சோர்வடைந்தனர்.