தஞ்சாவூர்: தமிழ்நாடு கடலோர காவல் படை பிரிவு சார்பில், மீனவ இளைஞர்களுக்கு வழங்கிய தனித் திறன் பயிற்சியில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் இந்திய கடற்படைக்கு தேர்வாகியுள்ளார்.
தமிழக அரசு கடலோர காவல் படை பிரிவு சார்பில், மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்பான தனித்திறன் பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன்படி, தமிழகத்தில் கடலுார், கமுதி, கன்னியாகுமரி ஆகிய மூன்று இடங்களிலும் 90 நாட்கள் நடந்த பயிற்சியில், மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த 120 இளைஞர்கள் கலந்துக்கொண்டு தனித்திறன் பயிற்சிகளை பெற்றனர்.
இவர்களுக்கு தங்குமிடம், பயிற்சி, உணவு, உடைகள் உள்ளிட்ட அனைத்தையும் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது.
இதில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நடந்த பயிற்சியில், தஞ்சாவூர் மாவட்டம்ப பேராவூரணியை அடுத்த திருவத்தேவன் பகுதியை சேர்ந்த சங்கர்- நாகரதி தம்பதி மகன் முத்துப்பாண்டி,21,. என்ற இளைஞர் பயிற்சியை பெற்றார். சிறப்பான பயிற்சி பெற்ற அவர், அக்னிபாத் வீரர்கள் பிரிவின் கீழ், இந்திய கடற்படைக்கு தற்போது தேர்வாகியுள்ளார்.
இவரை, தமிழக கடலோர காவல் படை பிரிவின் உயர் அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்கள் பாராட்டினர். மேலும், இந்திய கடற்படை தேர்வாகியுள்ள முத்துப்பாண்டிக்கு பயிற்சி வழங்கிய அதிகாரிகளுக்கும், வாய்ப்பு அளித்த தமிழக போலீசாருக்கும், முதல்வருக்கும் பெற்றோர்கள் நன்றியை தெரிவித்துள்ளார். தற்போது முத்துப்பாண்டி இந்திய கடற்படையின் சிலிக்கான் பகுதியில் பயிற்சியில் சேர்ந்துள்ளார்.