வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லி மாநகராட்சி மேயர் தேர்தலை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடத்த வேண்டும். நியமன உறுப்பினர்களை ஓட்டுப்போட அனுமதிக்கக்கூடாது எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி மனு தாக்கல் செய்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த டில்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி 134 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ.,104 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து சில நாட்களுக்கு முன் புதிய மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. அப்போது மாநகராட்சிக்கு 10 நியமன உறுப்பினர்களை டில்லி கவர்னர் சக்சேனா நியமித்தார்.
தொடர்ந்து பா.ஜ., கவுன்சிலர் சத்யா சர்மாவை, மேயர் தேர்தலை நடத்த, தற்காலிக அவை தலைவராகவும் கவர்னர் நியமித்தார். பிறகு டில்லி மாநகராட்சி அலுவலகத்தில் , பாஜ.,- ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால், மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து, ஜன.,24 ல் மாநகராட்சி மீண்டும் கூடிய போது ஆம் ஆத்மி பாஜ., கவுன்சிலர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால், அன்றைய தினம் நடைபெற இருந்த மேயர், துணை மேயர் தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் ஆம் ஆத்மி சார்பில் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஷெல்லி ஒபராய் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: மேயர் தேர்தலை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடத்த வேண்டும். நியமன உறுப்பினர்களை ஓட்டுப்போட அனுமதிக்கக்கூடாது. இதற்கு சட்டத்தில் அனுமதி வழங்கப்படவில்லை எனக்கூறப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நாளை (ஜன.,27) அன்று விசாரணைக்கு வரும் என தெரிகிறது.