மின்சாரம் எப்படி வீணாகிறது, அதை எப்படி மிச்சப்படுத்துவது என்று கண்காணிப்பது மிகப் பெரிய சவால். அதை ஒவ்வொரு மின் இணைப்பிலுள்ள 'பிளக்'கின் அளவிலும் செய்ய முடியும் என்கிறது பிரிட்டனைச் சேர்ந்த 'மெஷரபிள் எனர்ஜி.'
பெரிய ஆலைகள், நிறுவனங்களில் வீணாகும் மின்சாரத்தை மிச்சப்படுத்தும் நோக்கில், ஒரு 'ஸ்மார்ட் சாக்கெட்' தொழில்நுட்பத்தை மெஷரபிலின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இதன்படி, மின்சாரம் வெளியேறும் 'பிளக், சுவிட்ச்' என அனைத்தும் தானியங்கி நுண்ணறிவு மென்பொருளுடன் இணைக்கப்பட்டிருக்கும். எந்தக் கருவி, எப்போது முடுக்கப்படுகிறது, அது எப்போது மின்சாரத்தை வீணாக்குகிறது போன்றவற்றை செயற்கை நுண்ணறிவு மென்பொருள் 24 மணி நேரமும் கண்காணித்து தகவலை சேகரிக்கிறது. தேவைப்பட்டால், அதுவே விரயத்தை தவிர்க்க குறிப்பிட்ட கருவிக்கு மின்சாரத்தை நிறுத்தவும் செய்கிறது.
இப்படி ஒவ்வொரு புள்ளியிலும் மின்சாரத்தை கண்காணித்து கட்டுப்படுத்தினால், மின் கட்டணத்தில் 20 சதவீதம் வரை குறைக்க முடியும்.
ஸ்மார்ட் சாக்கெட் கருவிகளுக்கு ஆகிற செலவை இரண்டு ஆண்டுகளில் திரும்ப எடுத்துவிடலாம் என்பதால், பெரிய கட்டடம் கட்டுவோர் இவற்றை நிறுவ வாய்ப்புகள் அதிகம்.