மேற்கத்திய அறிவியலாளர்களுக்கு திபெத்திய புத்த துறவிகள் மீது ஒரு கண். அண்மையில், தவமாய் தவமிருக்கும் புத்த மடாலயத் துறவிகள் தினமும் தியானம் செய்வதால், வயிற்றில் இருக்கும் நுண்ணுயிரியம், எந்த மாதிரியான மாற்றத்துக்கு ஆளாகிறது என்பதை ஆராய்ச்சி செய்துள்ளனர் சில ஆராய்ச்சியாளர்கள்.
திபெத்திய சில மடாலயங்களுக்குச் சென்ற அவர்கள், 30 ஆண்டுகளாக தினமும் தியானம் செய்யும் 37 புத்த துறவிகளின் மலத்தை சேகரித்தனர்.
அதில் இருக்கும் நுண்ணுயிரிகளை ஆராய்ந்தனர். அதே மடாலயங்களுக்கு அருகே வசிக்கும், தியானம் செய்யாதோரிடமும் மலம் சேகரித்து ஆராய்ந்தனர்.
ஆய்வின் இறுதியில், தியானம் செய்வோரின் கழிவுகளில், 'பிரிவோடெல்லா, பேக்டீராய்டெஸ்' போன்ற நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் இருந்தன.
ஆனால், அக்கம்பக்கத்தாரிடம் சேகரித் கழிவில் இருந்த நல்ல நுண்ணுயிரிகளில், அந்தவகை பாக்டீரியாக்கள் இல்லை.
திபெத்திய துறவிகளின் குடலில் கிடைத்த பிரிவோடெல்லா, பேக்டீராய்டெஸ் போன்ற நற்கிருமிகள் இருப்போருக்கு மனச் சோர்வு, பதற்றம் போன்றவை இருக்காது என்று கடந்த கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனவே தினசரி தியானிப்பவர்களின் உள்ளமும் குடலும் நலமாக இருக்கும் என்ற முடிவுக்கு நாம் வரலாம் இல்லையா? இந்த ஆய்வு, 'ஜெனரல் சைக்கியாட்ரி' இதழில் வெளி வந்துள்ளது.