ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், ரஷ்ய ஆதரவாளர் ஒருவருடன் போஸ் கொடுத்ததுடன், கோஷம் எழுப்பி செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச்சின் தந்தை ஸ்ரட்ஜன் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், ரஷ்யாவின் ஆண்ட்ரே ரூபலெவ்வை எதிர்கொண்டார். இதில் 6-1,6-2,6-4 என்ற நேர் செட்களில் ஜோகோவிச் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். டென்னிஸ் போட்டியினை ஜோகோவிச் தந்தை ஸ்ரட்ஜன், அவரது மனைவியுடன் நேரில் கண்டு ரசித்தார்.
உக்ரைன் மீதான ரஷ்ய போரை தொடர்ந்து, ரஷ்ய வீரர்கள் வெள்ளை கொடியுடன் தனி வீரர்களாக போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கான உக்ரைனின் தூதர் வாசில் மைரோஷ்னிசென்கோ கோரிக்கையை தொடர்ந்து, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் போது பார்வையாளர்கள் ரஷ்ய அல்லது பெலாரஸ் கொடிகளை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு பின்னர், மைதானம் அருகே ஒரு குழுவினர், ரஷ்ய கொடி மற்றும் புடின் படத்துடன் கூடிய கொடியுடன் ரஷ்யாவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியுள்ளனர். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
![]()
|
இதனிடையே ரஷ்ய ஆதரவு ஆஸ்திரேலிய யூடியூப் சேனலில், "நோவக் ஜோகோவிச்சின் தந்தை துணிச்சலான அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார்” என்ற தலைப்பில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டது. அதில் புடின் படத்துடன் கூடிய நபருடன் போஸ் கொடுத்த ஜோகோவிச் தந்தை, செர்பிய மொழியில், ”ரஷ்யா நீடுழி வாழ்க” என கூறுகிறார். மேலும் ரஷ்ய ஆதரவு 'இசட்' குறியீட்டுடன் பார்வையாளர் ஒருவர் மைதானத்தில் அமர்ந்துள்ள புகைப்படமும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
![]()
|
இச்சம்பவம் குறித்து டிவிட்டரில் உக்ரைன் தூதர் வசில் மைரோஷ்னிசென்கோ, ”இது ஒரு அவமானம்” என விமர்சித்துள்ளார். இது குறித்து டென்னிஸ் ஆஸ்திரேலியா அமைப்பு ,"தகாத கொடிகள், சின்னங்களை கொண்டு வந்தது மற்றும் பாதுகாப்பு காவலர்களை அச்சுறுத்தியதை தொடர்ந்து போலீசார் வரவழைக்கப்பட்டு அவர்கள் மெல்போர்ன் பூங்காவில் இருந்து வெளியேற்றப்பட்டனர்”. என விளக்கம் அளித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement