வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லியில் உள்ள நிதியமைச்சகம் அலுவலகத்தில், இன்று(ஜன.,26) அல்வா கிண்டும் நிகழ்ச்சி கோலாகலகமாக நடைபெற்றது.

2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்., 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன் படி, பிப்ரவரி 1ம் தேதி பார்லிமென்டில் 2023-24 நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கையை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

வழக்கமாக பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் பல மாதங்களுக்கு முன்பாகவே துவங்கிவிடும். பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடும் பணி, பட்ஜெட் தாக்கல் தினத்துக்கு 10 நாட்களுக்கு முன் துவங்கும். இந்த பணி துவங்குவதை குறிக்கும் வகையில் 'அல்வா கிண்டும்' நிகழ்ச்சி நடப்பது வழக்கம்.
இந்நிலையில், டில்லியில் உள்ள நிதியமைச்சகம் அலுவலகத்தில், இன்று(ஜன.,26) 2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தொடர்பான ஆவணங்களை அச்சிடுவதற்கான துவக்கத்தைக் குறிக்கும் வகையில் அல்வா கிண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அல்வா கிண்டும் நிகழ்ச்சி
பொதுவாக பார்லிமென்டில், பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்தாக சில நாள்களுக்கு முன் அல்வா கிண்டும் நிகழ்ச்சியை மத்திய நிதி அமைச்சகம் கொண்டாடும். பட்ஜெட் அறிக்கை தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியது கொண்டாடும் விதமாக மத்திய நிதியமைச்சர் ஊழியர்களுக்கு தனது கையால் அல்வா கிண்டி வழங்குவார்.
நிதியமைச்சர் தனது கையால் அல்வா கிண்டி அதை ஊழியருக்கு பரிமாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார். இதை மத்திய நிதியமைச்சகம் மரபாக வைத்துள்ளது. கடந்தாண்டு கோவிட்-19 பெருந்தொற்றை கருத்தில் கொண்டு இந்த அல்வா கிண்டு விழா ரத்து செய்யப்பட்டது.