வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: கவர்னர் ரவி அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அதில் அமைச்சர்களும் இந்த விருந்தில் கலந்து கொண்டனர். இதனால், கவர்னருடனான தமிழக அரசின் உறவு சுமூகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசு- கவர்னர் இடையே மோதல் நீடித்து வருகிறது. சமீபத்தில் கவர்னர் உரையுடன் துவங்கிய சட்டசபை கூட்டத்தொடரில், தமிழக அரசு தயாரித்து தந்த அறிக்கையில் இருந்த சில வார்த்தைகளை கவர்னர் ரவி வாசிக்கவில்லை.
சில வார்த்தைகளை தாமாக வாசித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், கவர்னர் வாசித்த உரையை அவைக்குறிப்பில் ஏற்றக்கூடாது என தீர்மானம் கொண்டு வந்தார்.
அப்போது, சட்டசபையில் இருந்து கவர்னர் ரவி வெளிநடப்பு செய்தார். இதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், கவர்னர் மாளிகையில் நடந்த பொங்கல் விழாவில் ஸ்டாலின் பங்கேற்கவில்லை.
முதல்வருக்கு கவர்னர் அழைப்பு
குடியரசு தினத்தை முன்னிட்டு தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி, முதல்வர் ஸ்டாலினுக்கு, கவர்னர் ரவி தொலைபேசியில் அழைப்பு விடுத்தார்.குடியரசு தின விழாவையொட்டி, இன்று மாலை, 4:30 மணிக்கு, கவர்னர் மாளிகையில், தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் பங்கேற்கும்படி, முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு, அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. முதல்வரின் செயலர் ஆனந்தராவ் பாட்டில்,நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்துஅழைப்பிதழ் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை, கவர்னர் ரவி தொலைபேசியில், முதல்வரை தொடர்பு கொண்டு, தேநீர் விருந்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.
சட்டசபை நிகழ்வுகளை தொடர்ந்து 17 நாட்களுக்கு பிறகு குடியரசு தின விழாவில் கவர்னரை, நேரில் சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின், அவரை சிரித்த முகத்துடன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இந்நிலையில், மாலையில் நடந்த கவர்னர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, துரைமுருகன் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, பாடகி சுசிலா, மேற்கு வங்க முன்னள் கவர்னர் எம்.கே.நாராயணன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்றவர்களை, கவர்னரும், முதல்வரும் இணைந்து வரவேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்து கொண்டதினால் தமிழக அரசு - கவர்னர் இடையிலான உறவில் சுமூக தன்மை ஏற்பட்டதாக தெரிகிறது. கவர்னரும் தனது பேச்சில் வாழ்க தமிழ்நாடு என்றே குறிப்பிட்டார்.