வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை:மருதமலை அடிவாரத்தில், வனப்பகுதியை ஒட்டியுள்ள குப்பை கிடங்கில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டதால், வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
மருதமலை அடிவாரம், வனப்பகுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவில், சோமையாம்பாளையம் ஊராட்சிக்கு சொந்தமான, குப்பை கிடங்கு உள்ளது. காப்பு காட்டை ஒட்டி அமைந்துள்ளதால் குப்பை கொட்ட வேண்டாம் என வனத்துறை சார்பில் பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும், குப்பை கொட்டப்படுவதை தடுக்க முடியவில்லை. இதனால், இந்த இடமே குப்பை மேடாக காட்சியளிக்கிறது.
வனத்தை ஒட்டி அமைந்துள்ளதால் இங்கு, யானை, மான், காட்டுபன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் கழிவுகளை உண்பதற்காக அதிகளவில் வருவது வழக்கம். கடந்தாண்டு இங்கு உலா வரும் யானைகளின் சாணத்தில் பிஸ்கட், சாம்பார் பொடி கவர், நாப்கின், பால்கவர் உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நேற்று மாலை குப்பை கிடங்கில் திடீரென தீப்பற்றியது. தீ வேகமாக பரவியதால், அந்த இடமே காட்டுத்தீ ஏற்பட்டது போல் காட்சியளித்ததோடு கடும் புகை மூட்டமும் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
வனத்துறையினர் கூறுகையில்,'வனத்தை ஒட்டிய இந்த இடத்தில், பிளாஸ்டிக் குப்பைகள் தரம் பிரிக்காமல் கொட்டப்படுகின்றன. பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொள்ளும் வன விலங்குகளுக்கு அஜீரண கோளாறு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதை கருத்தில் கொண்டு, குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற பல முறை அறிவுறுத்திவிட்டோம். இருப்பினும் இதற்கு இதுவரை ஊராட்சி நிர்வாகம் செவிசாய்க்கவில்லை,' என்றனர்.
சோமையம்பாளையம் ஊராட்சி தலைவர் ரங்கராஜ் கூறுகையில்,'' வேறு இடம் இல்லாதனாலதான் இங்கு குப்பை கொட்டுகிறோம். நகரை ஒட்டிய பகுதியாக இருப்பதால் தான் இந்த இடத்தை தேர்வு செய்தோம். யாரோ சமூக விரோதிகள் தீயை வைத்துள்ளனர். தகவல் தெரிந்ததம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்து விட்டோம். யாருக்கும் எந்த பாதிப்பும் வராத வகையில் தீயை அணைத்து விடுவோம். குப்பை கிடங்கை வேறு இடம் மாற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.
வழக்கமாக அங்கு உலா வரும் காட்டு யானைகள், பயங்கரமாக தீ பரவியதை கண்டு அதிக சத்தத்துடன் நீண்ட நேரம் பிளிறிக் கொண்டே இருந்தன. யானைக் கூட்டம் அதிர்ச்சியில் அருகில் இருந்த பாரதியார் பல்கலை வளாகத்திற்குள்ளோ அல்லது ஊருக்குள்ளோ புகுந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. குப்பை கிடங்கில் பிடித்த தீ வனத்திற்குள் பரவி விடாமல் தடுப்பதற்காக 10க்கும் மேற்பட்ட வனப்பணியாளர்கள் தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், காட்டு யானைகளும் ஊருக்குள் புகுந்திருந்தால் நிச்சயம் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.