செபியின் ஒரு பிரிவான பொருளாதார மற்றும் கொள்கை ஆய்வு துறை எப்&ஓ வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களின் வர்த்தக முறை மற்றும் லாப நஷ்ட அறிக்கைகளை ஆய்வு செய்து ஒரு தரவினை வெளியிட்டுள்ளது. அதன்படி 10ல் 9 வர்த்தகர்கள் பங்குசார்ந்த எப்&ஓ பிரிவில் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.
வர்த்தகம் செய்து ஒரே ஆண்டில் லட்சாதிபதி ஆகலாம் என்ற கனவுடன் வருபவர்கள் இதனைப் பார்த்தாவது சுதாரித்துக்கொள்ள வேண்டும்.இந்த ஆய்விற்கான தரவுகளை நாட்டின் டாப் 10 தரகர்களான ஜீரோதா உள்ளிட்டவர்களிடமிருந்து தொகுத்துள்ளனர்.
அதன்படி சாம்பிளில் மொத்த வர்த்தகர்களின் எண்ணிக்கை 2019 மற்றும் 2022 நிதியாண்டுகளுக்கு இடையில் 500 சதவீதம் அதிகரித்துள்ளது. 2019ல், 7.1 லட்சம் வர்த்தகர்கள் சாம்பிளில் சேர்க்கப்பட்டனர், இது2022ல் 45.2 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும் ஆய்வறிக்கை தனிப்பட்ட முதலீட்டாளர்களுக்கும், ஆக்டிவ் வர்த்தகர்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் காட்டுகிறது.
ஒரு வருடத்தில் 5 முறைக்கு மேல் ஈக்விட்டி எஃப்&ஓ பிரிவில் வர்த்தகம் செய்தவர்களை ஆக்டிவ் டிரேடர்களாக வகைப்படுத்தியுள்ளனர்.

ஈக்விட்டி எப்&ஓ பிரிவில் 89 சதவீத தனிநபர் வர்த்தகர்கள் (அதாவது 10 தனிப்பட்ட வர்த்தகர்களில் 9 பேர்) நஷ்டம் அடைந்துள்ளனர். 2022 நிதியாண்டில் அவர்களுக்கு சராசரியாக ரூ.1.1 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் 90 சதவீத ஆக்டிவ் வர்த்தகர்கள் சராசரியாக ரூ.1.25 லட்சம் இழப்பை சந்தித்துள்ளனர்.
2022ல் ஈக்விட்டி எப்&ஓ பிரிவில் 11% தனிநபர் வர்த்தகர்கள் மட்டுமே சராசரியாக ரூ.1.5 லட்சம் லாபம் பார்த்துள்ளனர். ஆக்டிவ் வர்த்தகர்களில் 10 சதவீதம் நபர்கள் மட்டுமே சராசரியாக ஆண்டுக்கு ரூ.1.9 லட்சம் லாபம் பார்த்துள்ளனர். பரோட்டா மாஸ்டர், டீ மாஸ்டரின் ஆண்டு சம்பளமே இதை விட அதிகம் இருக்கும். ஆக்டிவ் வர்த்தகர்களில் நஷ்டம் அடைந்தவர்களின் நிகர வர்த்தக இழப்பு சராசரியாக ரூ.50,000 ஆக உள்ளது.
2020ல் இருந்து பங்குச்சந்தைக்கு இளைஞர்களின் வருகை அதிகரித்துள்ளது. 2022ல் 30 - 40 வயதுக்குட்பட்ட வர்த்தகர்கள் எண்ணிக்கை அதிகபட்சமாக 39%. 20 - 30 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 36 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2019ல் இது 11% ஆக உள்ளது.
ஸ்டாக் ப்யூச்சர்ஸில் இந்த 20 வயதுக்குட்பட்டவர்களும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களும் சராசரியாக ரூ.1 லட்சத்துக்கு மேல் இழந்துள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக இன்டெக்ஸ் ப்யூச்சர்ஸில் அதிகம் விட்டுள்ளனர். அதில் 20 வயதுக்குட்பட்டவர்கள் சராசரியாக ரூ.54,584ம், மற்ற வயதினர் ரூ.40 ஆயிரத்திற்கு மேலும் இழந்துள்ளனர்.
லாப அறிக்கையை வைத்துப் பார்த்தால், அதிக நஷ்டம் தரக்கூடிய ஸ்டாக் ப்யூச்சர்ஸ் மற்றும் இன்டெக்ஸ் ப்யூச்சர்ஸ் தான் லாபமும் தந்துள்ளது. 20 வயதிக்குட்பட்டவர்கள் முறையே ரூ.55 ஆயிரத்துக்கு மேல், ரூ.30 ஆயிரத்துக்கு மேல் லாபம் பார்த்துள்ளனர். மற்ற வயதினர் ஸ்டாக் ப்யூச்சர்ஸில் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை லாபம் பார்க்கின்றனர். இன்டெக்ஸில் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் லாபம் பார்த்துள்ளனர். ஆனாலும் நஷ்ட அளவு இதை விட இருமடங்கு அதிகம்.