தொண்டாமுத்தூர்:நாட்டின், 74வது குடியரசு தின விழாவையொட்டி, தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, 10 ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது.
தென்னமநல்லூர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு, ஊராட்சி மன்ற தலைவர் ஆறுச்சாமி தலைமை வகித்தார்.
துணை பி.டி.ஓ., கீதாலட்சுமி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். இக்கூட்டத்தில், தொழுநோய் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை, அதிகாரிகளும் பொதுமக்களும் ஏற்றுக்கொண்டனர்.
n புத்தூர் புது காலனியில், கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையின்போது, பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது. அப்போது, பள்ளத்தை தூர்வாரி, குடியிருப்பு பகுதிக்குள் நீர் வருவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். ஆனால், தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி, பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
n மத்வராயபுரம் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில், முண்டந்துறை கிராமத்தில், யானை வழித்தடங்களில் தனியார் சிலர் அனுமதி இன்றி சுற்றுச்சுவர் கட்டி உள்ளனர். இதனை அகற்ற வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.
n கிராம சபை கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து, ஒரு குறிப்பிட்ட அதிகாரி மட்டுமே கலந்து கொள்கிறார். ஒரு அதிகாரி இரண்டு கிராம சபை கூட்டங்களுக்கு மேல் கலந்து கொள்ளக்கூடாது என்பது விதி. அவரை மாற்ற வேண்டுமென, மனு அளிக்கப்பட்டது.
n மத்வராயபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் நேரடியாக நொய்யல் ஆறு மற்றும் வாய்க்கால்களில் கலக்கிறது. இதனால், நீர்நிலைகள் மாசுபடுவதோடு, விளை நிலங்களும் பாதிப்படுகிறது. எனவே, ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.
n இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், செம்மேடு முதல் பூண்டி வரை செல்லும் சாலையில், இரவு, பகலாக வாகனங்கள் சென்று வருகின்றன.
இதனால், செம்மேடு பகுதியில், போலீசார் சோதனை சாவடி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.