சண்டிகார்:இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 'டிஜிட்டல் கரன்சி', நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்துவதாக இருக்கும் என, ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குனர் அஜய் குமார் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றில் பங்கேற்று, அவர் மேலும் கூறியுள்ளதாவது:
டிஜிட்டல் கரன்சி, நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்த உதவுவதாக இருக்கும். அத்துடன், பணம் செலுத்தும் முறையை மிகத் திறமையானதாகவும், ரொக்க பரிமாற்ற செலவை குறைக்கும் வகையிலும் இருக்கும்.
ரிசர்வ் வங்கி, ஏற்கனவே மொத்த விற்பனை மற்றும் சில்லரை விற்பனை பிரிவுகளில், டிஜிட்டல் கரன்சியை வெள்ளோட்ட முறையில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த டிஜிட்டல் கரன்சியானது, எந்த வகையிலும் தற்போதைய ரொக்க கரன்சியிலிருந்து வேறுபட்டது கிடையாது. ரொக்க கரன்சியின் அனைத்து குணாம்சங்களுடன் கூடிய டிஜிட்டல் வடிவமான கரன்சியாக இருக்கும்.
மேலும், தற்போது பரிமாற்றத்துக்காக இருக்கும் எதையும் மாற்றுவதற்காக இது கொண்டு வரப்படவில்லை.
டிஜிட்டல் கரன்சியை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு முக்கிய காரணம், டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவது மற்றும் ரொக்க பண பரிமாற்றங்களில் ஏற்படும் செலவுகளை குறைப்பது ஆகியவை தான்.
மேலும், தற்போது இணைய வசதி தேவைப்படாத 'ஆப்லைன்' பரிமாற்ற வசதி வாய்ப்புகள் குறித்தும் ஆராய்ந்து வருகிறோம். ஆப்லைன் பரிமாற்றத்தினால், எளிதில் அணுக இயலாத தொலைதுார பகுதிகளில் இருப்பவர்கள் பயனடைய முடியும்.
தற்போது, 115 நாடுகளில், டிஜிட்டல் கரன்சி வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.