கோவை:குரும்பபாளையத்தில் இயங்கி வரும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை சார்பில், நேருநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், வாசிப்பு போட்டி நடத்தப்பட்டது.
நான்காம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும், 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கதைகள், கட்டுரைகள், தலைவர்கள் மற்றும் அறிஞர்களின் வரலாறு என பல்வேறு நூல்களை மாணவர்கள் வாசித்தனர்.
வாசிப்பு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள், சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. கடந்த ஒரு மாதமாக நடந்த வாசிப்பு இயக்கத்தில் பங்கெடுத்த, 70 மாணவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
அறக்கட்டளை நிறுவனர் தில்லை செந்தில் பிரபு பேசுகையில், ''ஸ்மார்ட் போன் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களால், மாணவர்களின் கற்பனை திறன் பாதிக்கப்படுகிறது. புத்தக வாசிப்பின் இன்பத்தையும், பலன்களையும் மாணவ பருவத்திலேயே பயிற்றுவிக்கும் முயற்சி தான் இந்த திட்டம்,'' என்றார்.
விழாவில், பள்ளித் தலைமை ஆசிரியர் சீதாலட்சுமி, மாமன்ற உறுப்பினர் கோவிந்தராஜ், அறக்கட்டளை தன்னார்வலர்கள் சண்முகசுந்தரம், ஸ்ரீதர் பாபு, அன்பரசன், ராஜமுருகன், ஹரி மற்றும் பலர் பங்கேற்றனர்.