புதுடில்லி:கோதுமை மற்றும் ஆட்டா விலை உயர்வைக் கட்டுப்படுத்த, 30 லட்சம் டன் கோதுமையை வெளிச்சந்தையில் விற்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக கடந்த வாரம், உணவுத் துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா, சில்லரை சந்தையில், கோதுமை மற்றும் ஆட்டா விலைகள் அதிகரித்துள்ளதாகவும், விலைகளைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து வழிகளையும் மத்திய அரசு ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்து இருந்தார்.
இதன்படி, விலையைக் கட்டுப்படுத்த உணவுத்துறை அமைச்சகம், ஓ.எம்.எஸ்.எஸ்., எனும் வெளிச்சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ், 30 லட்சம் டன்கோதுமையை விற்க முடிவு செய்துள்ளது.
மாவு ஆலைகள் மற்றும்வியாபாரிகளுக்கு, டெண்டர்கள் வழியாக கோதுமை விற்கப்படும். உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட சரிவு காரணமாகவும், விலையைக் கட்டுப்படுத்தவும் கடந்த மே மாதம், கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.
அரசின் தரவுகளின்படி, முக்கிய நகரங்களில் கோதுமை விலை நேற்று முன்தினம் ஒரு கிலோ 33.43 ரூபாயாக இருந்தது.
இது ஓராண்டுக்கு முன், ஒரு கிலோ 28.24 ரூபாயாக இருந்தது. இதே போல், ஆட்டா விலை நேற்று முன்தினம் ஒரு கிலோ. 37.95 ரூபாயாக இருந்தது, முந்தைய ஆண்டு இது, 31.41 ரூபாயாக இருந்தது.
இந்திய அரசுக்குச் சொந்தமான உணவுக் கழகத்திடம், ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி, கிட்டத்தட்ட 171.70 லட்சம் டன் கோதுமை கையிருப்பில் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏப்ரல் மாதத்திலிருந்து கோதுமை கொள்முதல் தொடங்கும் என்றும் ஏற்றுமதி மீதான தடையை நீக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும் என்றும் உணவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.