புதுடில்லி:அமெரிக்காவை சேர்ந்த, 'ஹிண்டன்பர்க் ரிசர்ச்' நிறுவனம் 'அதானி' குழுமம் குறித்த குற்றச்சாட்டுகளுடன் கூடிய ஆய்வறிக்கை ஒன்றை கடந்த 24ம் தேதியன்று வெளியிட்ட நிலையில், இந்நிறுவனத்தின் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாக, அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
ஹிண்டன்பர்க் நிறுவனம்,அதானி குழும நிறுவனங்கள் குறித்த தன்னுடைய ஆய்வறிக்கையில்,சந்தையை தவறாக கையாண்டுள்ளதாகவும், கணக்குகளில் மோசடிகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
தொடர் பங்கு வெளியீட்டின் வாயிலாக, 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை திரட்டவும், உலகளவிலான முதலீடுகளை ஈர்க்கவும், 'அதானி எண்டர்பிரைசஸ்' நிறுவனம் திட்டமிட்டுள்ள நிலையில், ஹிண்டன்பர்க் அறிக்கை, சந்தையில் அதிர்வலைகளை எழுப்பியது.
இதையடுத்து, அதானி நிறுவனம் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை, ஆதாரமற்ற ஒருபக்க சார்புடைய குற்றச்சாட்டு என்றும், இந்த ஆய்வறிக்கை தொடர் பங்கு வெளியீட்டை பாதிக்கும் வகையில் வந்திருப்பதாகவும் பதில் அளித்தது.
தற்போது, அடுத்த கட்டமாக சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து, நிறுவனத்தின் சார்பில் அதன் கம்பெனி செகரட்டரியும், சட்ட பிரிவின் இணை தலைவருமான ஜாட்டின் ஜலுந்த்வாலா தெரிவித்துள்ளதாவது:
இந்த ஆய்வறிக்கையானது, முதலீட்டாளர்களையும் பொதுமக்களையும் தவறாக வழிநடத்தும் வகையில் வெளியிடப்பட்டு உள்ளது.
அதானி குழுமம் மற்றும் அதன் தலைவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தொடர் பங்கு வெளியீட்டை பாதிக்கும் வகையில் வெளிநாட்டு நிறுவனம் வேண்டுமென்றே வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த ஆராய்ச்சி அறிக்கையால், இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்கள் மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது.
ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு எதிராக, அமெரிக்க மற்றும் இந்திய சட்டங்களின் கீழ், வழக்கு தொடர்வது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
'அதானி' குழுமத்தை சேர்ந்த, 'அதானி எண்டர்பிரைசஸ்' நிறுவனம், 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டும் வகையில், தொடர் பங்கு வெளியீட்டுக்கு வரும் நிலையில், துணிகர முதலீட்டாளர்கள் வாயிலாக, 5,985 கோடி ரூபாய் முதலீட்டை திரட்டி உள்ளது.