சென்னை:குடியரசு தினத்தை முன்னிட்டு, கவர்னர் மாளிகையில் நேற்று மாலை நடந்த தேநீர் விருந்தில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். எதிர்க்கட்சியினரும் பங்கேற்ற நிலையில், தி.மு.க., கூட்டணி கட்சியினர் மட்டும் புறக்கணித்தனர்.
சென்னையில் உள்ள கவர்னர் மாளிகையில், குடியரசு தினத்தையொட்டி, நேற்று கவர்னர் ரவி தேநீர் விருந்து அளித்தார்.
முதல்வர், அமைச்சர்கள், நீதிபதிகள், விளையாட்டு வீரர்கள், பல்வேறு துறை சாதனையாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் என, 3,000 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது.
அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் நிலவியதால், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் தேநீர் விருந்தில் பங்கேற்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில், தி.மு.க., கூட்டணி கட்சிகள், கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தன.
அனைத்திற்கும் உச்சகட்டமாக, சட்டசபை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, 'தமிழ்நாட்டு நலன், தமிழக மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்கள் தான், கவர்னர் தேநீர் விருந்தில் பங்கேற்பர். அக்கறை உள்ளவர்கள் புறக்கணிப்பர்' என்றார்.
இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் மாலை, கவர்னர் ரவி தொலைபேசியில், முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு, தேநீர் விருந்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். கவர்னரின் செயலர், முதல்வரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார்.
அதைத் தொடர்ந்து, கவர்னர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சேவூர் ராமச்சந்திரன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, த.மா.கா., தலைவர் வாசன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோரும் பங்கேற்றனர்.
மாலை 4:37 மணிக்கு, விழாவுக்கு வந்த அனைவரையும், அவர்களின் இருக்கைக்கு சென்று, கவர்னர் ரவி, அவரது மனைவி லட்சுமி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வரவேற்று, குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்தனர். மாலை 4:54 மணிக்கு, தங்கள் இருக்கைக்கு சென்று அமர்ந்தனர்.
அதன்பின், 'கலாஷேத்ரா பவுண்டேஷன்' அமைப்பு சார்பில், 'பாரதி கண்ட பாரதம்' என்ற தலைப்பில், நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
விழாவில், முன்னாள் கவர்னர்கள் நாராயணன், கோபாலகிருஷ்ண காந்தி, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, பெரியசாமி, வேலு, ராமச்சந்திரன், உதயநிதி, தலைமைச் செயலர் இறையன்பு மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
கவர்னர் மாளிகை சார்பில், சிறந்த சமூக சேவகராக தேர்வு செய்யப்பட்ட, சுவாமி விவேகானந்தா ஊரக மேம்பாட்டு மைய கவுரவ செயலர் கிருஷ்ணமாச்சாரி; சுற்றுச்சூழல் பாதுகாவலராக தேர்வு செய்யப்பட்ட, கோவை சிறுதுளி தன்னார்வ நிறுவனத்தை சேர்ந்த வனிதா மோகன் ஆகியோருக்கு, தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழை, கவர்னர் ரவி வழங்கினார்.விருதாளர்களை தேர்வு செய்த, தேர்வுக் குழுவினரும் கவுரவிக்கப்பட்டனர்.
சென்னை மெரினா கடற்கரையில், நேற்று காலை நடந்த குடியரசு தின விழாவில், சிறப்பாக கலை நிகழ்ச்சிகள் நடத்திய, சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, ராணிமேரி கல்லுாரி மாணவியருக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.அலங்கார ஊர்தி அணிவகுப்பில், காவல் துறை, தீயணைப்புத் துறை, செய்தித் துறை முதல் மூன்று இடங்களைப் பெற்றன.காவல் துறைக்கான பரிசை, உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, டி.ஜி.பி., சைலேந்திரபாபு பெற்றனர்.தீயணைப்புத் துறைக்கான பரிசை, தீயணைப்புத் துறை டி.ஜி.பி., ஆபாஷ்குமார்; செய்தித் துறைக்கான பரிசை, துறை இயக்குனர் ஜெயசீலன் ஆகியோர் பெற்றனர்.
கொடிநாள் நிதி வசூலில், முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாவட்டங்களுக்கான பரிசை, சென்னை கலெக்டர் அமிர்தஜோதி, திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ், தஞ்சாவூர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் பெற்றனர். மாநகராட்சிகளில் முதல் இரண்டு இடங்களுக்கான பரிசை, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் பெற்றனர்.
தேநீர் விருந்தில், முதல்வர் ஸ்டாலினும், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும், நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். இருவரும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர். முன்னதாக கவர்னர் ரவியுடன், முதல்வர் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.விழா முடிந்ததும், அண்ணாமலை மற்றும் டி.ஜி.பி., சைலேந்திரபாபு உடன், 'செல்பி' எடுக்க, விருந்தில் பங்கேற்றவர்கள் ஆர்வம் காட்டினர்.