பசு நெய்யின் மகத்துவம் பற்றி விவரிக்கும், சித்த மருத்துவர் பி.மைக்கேல் ஜெயராஜ்: நெய் என்றாலே, அது பசு நெய் தான். உருக்கிய நெய்யை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், பார்வை கூர்மையாகும். கீரைகளில் உள்ள சத்துக்கள், உடலால் முழுமையாக உட்கிரகிக்கப்பட வேண்டும் என்றால், அதனுடன் உருக்கிய நெய் சேர்க்க வேண்டும்.
சித்த மருத்துவத்தில் நெய் ஒரு துணை மருந்து. பற்பம், செந்துாரம் போன்ற சித்த மருந்துகள், உடலில் முழுமையாகச் சேர வேண்டும் என்பதற்காக, அவற்றுடன் நெய் சேர்க்கிறோம்.
ஆறு மாதத்தில் இருந்து, குழந்தையின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்; அப்போது, குழந்தைகளுக்கு புரதம் அதிகம் தேவைப்படும்.
அந்தப் புரதம் குழந்தைகளின் உடலில் சேர உதவுவது நெய்; அதனால் தான், குழந்தைகளுக்கு ஆறாவது மாதத்தில் இருந்து, நெய் சேர்த்த பருப்பு சாதம் ஊட்ட ஆரம்பிக்கிறோம்.
சங்க நுால்களில் ஒன்றான, 'மலைபடுகடாம்' குறிப்பிடுகிற, ஊன் சேர்த்த நெய் சோறு தான், இன்றைக்கு பலராலும் விரும்பப்படும் பிரியாணி.
நோய் அணுகா விதிப்படி, குடிநீரை கொதிக்க வைத்தும், வெண்ணெய் நீக்கப்பட்ட தயிரை, நிறைய நீர் விட்டு மோராக்கியும், நெய்யை உருக்கியும் தான் சாப்பிட வேண்டும்.
ஒரு கைப்பிடி சுடுசோற்றில், உருக்கிய நெய்யை விட்டு சாப்பிட்டு வந்தால், எப்பேர்ப்பட்ட குடல் புண்ணும் ஆறும்.
நெய், காசநோய் வராமல் தடுக்கும்; இரைப்பு நோய்களையும் கட்டுக்குள் வைக்கும். முதல் கவளம் சோற்றை, 'சுக்கு, மிளகு, சீரகப் பொடி, உருக்கிய நெய் சேர்த்து சாப்பிட, செரிமான பிரச்னைகளே வராது.
சோற்று கொதிநீரில் நெய் விட்டு அருந்தினால், சாப்பிட்ட உடன் வயிற்றில் வருகிற வலி, வாயுத்தொல்லை இரண்டும், படிப்படியாக சரியாகும். தேவைப்பட்டால், இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம்.
பித்தம், உடல் எரிச்சல் இருப்போர் உருக்கிய நெய்யை தலையில் தேய்த்துக் குளித்தால், குணம் கிடைக்கும்; ரத்த அழுத்தம் இருப்போர் இதைப் பின்பற்றலாம்.
உடலின் நரம்புகள் அனைத்தும், உள்ளங் காலில் சென்று சேருவதால், இரவில் அங்கு நெய் பூசி, தவிட்டு ஒத்தடம் கொடுத்து வந்தால், கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.