ஏ.எம்.ஏ.ராஜேந்திரன், காளையார் கோவில், சிவகங்கை மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்:
'வரும் லோக்சபா தேர்தலுக்கு தேசிய அளவில், காங்கிரஸ் தலைமையில் பலமான எதிரணியை உருவாக்க, முதல்வர் ஸ்டாலின் கட்டும் மனக்கோட்டை மண் கோட்டையாகவே அமையும்' என, இதே பகுதியில் வாசகர் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார்.
அரசியல் ரீதியாக அவரது கருத்து தவறானது. அரசியலில் வெற்றி -- தோல்வி என்பது, எந்தக்கட்சிக்கும் நிரந்தரம் கிடையாது; அதேபோல, கூட்டணியும் நிரந்தரம் கிடையாது.
இன்றைய அரசியல் சூழ்நிலையில், எந்த கட்சியும் கூட்டணி இல்லாமல், தேர்தலை சந்திப்பது கிடையாது. யானை பலம் பெற்றிருக்கும் தேசியக் கட்சிகளுக்கும், எறும்பு பலம் உடைய சிறிய கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது; அந்த ஆதரவும், நிரந்தரம் கிடையாது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலின் போது, பா.ஜ., கூட்டணியில் இருந்த, ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா, அகாலி தளம் போன்ற கட்சிகள், இப்போது அந்தக் கூட்டணியில் இல்லை. 1984ல், பா.ஜ., இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது; ஆனால், 2019ல், 302 இடங்களில் வெற்றி பெற்றது.
அதற்கு முன், 2009ல் நடந்த லோக்சபா தேர்தலில், 210 இடங்களில் வெற்றி பெற்ற, காங்கிரஸ் கட்சி, 2019ல், 51 இடங்களில் தான் வெற்றி பெற்றது. 2014 லோக்சபா தேர்தலில், 37 இடங்களில் வெற்றி பெற்ற, அ.தி.மு.க.,2019 தேர்தலில், ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.
அரசியலில் நிரந்தர நண்பரும் கிடையாது; விரோதியும் கிடையாது. ஒரு கால கட்டத்தில், காங்கிரஸ் கட்சி பற்றி, 'கூடா நட்பு கேடாய் முடியும்' என்று கூறினார், முன்னாள் முதல்வர் கருணாநிதி. பின்னர் அவரே, 'நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சியை தருக' என்று, மாற்றி கோஷமிட்டார்.
கடந்த 2009, 2014, 2019ல் நடைபெற்ற லோக்சபா தேர்தல்களிலும், 2011, 2016, 2021ல் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களிலும், பின் உள்ளாட்சித்தேர்தலிலும், தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் தொடர்கிறது.
வரும் 2024 லோக்சபா தேர்தலுக்கு, ஒரு தேசிய கட்சியின் ஆதரவு, தி.மு.க.,வுக்கு தேவை; அந்த தேசிய கட்சி, காங்கிரஸ் தான்.
அதனால் தான், காங்., தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்று, முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார். இதை வாசகர் தெரிந்து கொள்ள வேண்டும். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. தேர்தல் தீர்ப்புகள் என்றும் நிரந்தரமானவை அல்ல; அவை மாறியபடியே இருக்கும்.
முதல்வரின் முழக்கத்திற்கு 'ஆப்பு' வைத்த அமைச்சர்!
என்.தொல்காப்பியன்,
மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருவள்ளூர்
மாவட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவிருந்த, வீரவணக்கநாள் நிகழ்ச்சி
சம்பந்தமாக ஆய்வு செய்ய சென்ற, பால் வளத் துறை அமைச்சர் நாசர்,
கட்சிக்காரர்கள் அமர வேண்டிய நாற்காலிகளை கொண்டு வர தாமதம் செய்த தொண்டர்
மீது ஆத்திரம் அடைந்து, அவரை தண்டிக்க, சாலையில் கிடந்த கல்லை எடுத்து
ஆக்ரோஷமாக எறியும் அற்புதமான காட்சி, பத்திரிகைகளில் முதல் பக்கத்தில்
வெளியாகி உள்ளது.
தி.மு.க., அமைச்சர்கள் வன்முறை பிரியர்களாக
இருப்பதில் ஆச்சரியம் இல்லை... தன்னிடம் மனு கொடுக்க வந்த பெண்ணை, அந்த
மனுவால், அப்பெண்ணின் தலையில் அடித்து, தன் வீரத்தை வெளிச்சம் போட்டுக்
காட்டினார், வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன்...
முன்னாள்
பிரதமர் இந்திராவையே, மதுரையில் உருட்டுக் கட்டையால் அடித்து, ரத்தம்
சிந்தச் செய்தவர்கள் தானே திராவிட செம்மல்கள். தி.மு.க., -
எம்.எல்.ஏ.,க்களை, எப்போதும், 'வா... போ...' என்று, ஒருமையில் அழைத்து
அழியாப் புகழ் பெற்றவர், அமைச்சர் நேரு...
பஸ்சில் இலவசமாக பயணம்
செய்யும் தாய்க்குலங்களை, 'ஓசி கிராக்கிகள்' என்று அழைத்து, அவமானம்
செய்தார், அமைச்சர் பொன்முடி. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக, கவர்னர்
ரவியை, 'அவன், இவன்...' என்று ஒருமையில் அழைத்து, பெரும் புகழ் பெற்றார்,
முதல்வர் ஸ்டாலின்.
தொண்டர்களுக்கும், அமைச்சர்களுக்கும், நல்வழி
காட்ட வேண்டிய முதல்வரே, மதிப்பு மிக்க கவர்னரை ஒருமையில் அழைத்து இழிவு
செய்யும் போது, அமைச்சர் நாசர், ஒரு பேட்டை ரவுடி போல, அப்பாவி தொண்டர்
மீது கல் எறிவது, பஞ்சமாபாதகமா என்ன?
தமிழகத்தில் வாரிசு அரசியலை
மட்டுமின்றி, வன்முறை அரசியலையும் செழித்து வளரச் செய்த
பெருமைக்குரியவர்கள் தான் திராவிட செம்மல்கள். தி.மு.க.,வை துவக்கிய
அண்ணாதுரை போற்றிய கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, அமைச்சர் நாசரின் அடாவடிச்
செயலால், சந்தி சிரிக்கும் நிலைக்கு வந்து விட்டது.
'தமிழகத்தின்
சட்டம் - ஒழுங்கு எக்காரணத்திற்காகவும் பாதிக்கப்படக் கூடாது' என்று
காவல்துறை அதிகாரிகளை அறிவுறுத்திய முதல்வர், தன் சக அமைச்சர்களுக்கு, இதை
வலியுறுத்திச் சொல்ல மறந்து விட்டார்.
ரவுடிகளை, எம்.எல்.ஏ., -
எம்.பி.,க்களாக்கி பெருமைப்படுத்திய ஒரே கட்சி, தி.மு.க., தான் என்பதை
மறுக்க முடியுமா? அதற்கான சிறந்த உதாரணம்... அமைச்சர் நாசர். 'தமிழ்நாடு
அமைதி பூங்கா' என, முழக்கம் செய்யும் முதல்வருக்கு, ஆப்பு வைப்பது போல
அமைந்து விட்டது, அமைச்சர் நாசரின் கல்லெறி சம்பவம்!
'டோக்கன்' முறையை அமல்படுத்தலாம்!
கோ.ராஜேஷ் கோபால், மணவாளக்குறிச்சி, குமரிமாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'டாஸ்மாக் மதுபான கடைகளை, பண்டிகை நாட்களில் மூடி விட்டு, அதன்பின் திறக்கலாம்' என, இப்பகுதியில் வாசகர்ஒருவர் கடிதம் எழுதி இருந்தார். மது அருந்துவதே பாவம்... அதில், விடுமுறை நாளென்ன... மற்ற நாட்கள் என்ன?
சில மாதங்களுக்கு முன் வந்த ஆயுத பூஜையின் போது, குமரி மாவட்டத்தில்மதுபான கடைகள் மூடப்பட்டிருந்தன.
ஆயுத பூஜை விடுமுறை முடிந்து, மதுபான கடைகள் திறக்கப்பட்ட போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு, அங்கு பெருந்திரளாக கூட்டம் அலைமோதியது.
'திருடுபவன் திருட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால், எப்படியாவது திருடத்தான் செய்வான்' என்பர். அதுபோல, மதுபான கடைகளுக்கு விடுமுறை விட்டு, அவற்றை மூடினால், அதற்கு முன்பே, 'ஸ்டாக்' வாங்கி வைத்தாவதுகுடிப்பர்; இதை மாற்ற முடியாது.
இதற்கு ஒரே வழி, நிரந்தரமாக மதுபான கடைகள் மூடி விடுவது தான். ஆனால், இலவசங்கள் வழங்கவும், பிற செலவுகளை சமாளிக்கவும், அரசுக்கு மது விற்பனைவாயிலாக கிடைக்கும் வருமானம் தேவை; அதனால், அரசும் மதுபான கடைகளை மூட வாய்ப்பில்லை.
மது குடிப்போர் எண்ணிக்கையையும், அவர்கள் குடிக்கும் அளவையும் கட்டுப்படுத்த வேண்டும் எனில், ராணுவத்தினருக்கு அவர்களுக்கான கேன்டீனில், ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே மது வழங்கப்படுவது போல, 'குடி'மகன்களுக்கும், ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு தான், மது வழங்கப்படும் என்று அறிவித்து, அதற்கான டோக்கன் வினியோகிக்கலாம்.
இப்படிச் செய்தால் மட்டுமே, மதுக்கடைகளில் கூட்டம் குறையும்; விற்பனையும் குறையும்