புதுடில்லி:இந்திய தொல்பொருள் ஆய்வு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நாட்டின், 1,000 நினைவுச் சின்னங்களை தனியார் நிறுவனங்கள் வசம் ஒப்படைத்து, அங்கு வசதிகளை புதுப்பித்து சுற்றுலா பயணியருக்கான அனுபவங்களை மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
![]()
|
இது குறித்து மத்திய கலாசாரத் துறை செயலர் கோவிந்த் மோகன், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
நாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களை பராமரிக்கும், 'மான்யூமென்ட் மித்ரா' என்ற திட்டத்தை மத்திய சுற்றுலா துறை அமைச்சகம் சில ஆண்டுகளுக்கு முன் துவக்கியது.
ஆனால், நாட்டின் நினைவுச் சின்னங்கள் இந்திய தொல்பொருள் ஆய்வு துறை கட்டுப்பாட்டின் கீழ் வருவதை அடுத்து, இத்திட்டம் மத்திய கலாசார துறைக்கு மாற்றப்பட்டது.
இந்த, 'மான்யூமென்ட் மித்ரா' திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள, 1,000 நினைவுச் சின்னங்களை தனியார் பெருநிறுவனங்கள் வசம் ஒப்படைக்க உள்ளோம்.
'கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி' என்றழைக்கப்படும், பெருநிறுவனங்களுக்கான சமூக பொறுப்புணர்வு பணியின் கீழ், இந்த நினைவுச் சின்னங்களில் அமைந்துள்ள பல்வேறு வசதிகளை, தனியார் நிறுவனங்கள் புதுப்பித்து தரும்.
உதாரணமாக, நினைவுச் சின்னம் அமைந்துள்ள இடத்தில் சுற்றுலா பயணியருக்கு தேவையான அடிப்படை வசதிகளை புதுப்பிப்பது, ஒலி - ஒளி காட்சிகளின் தரத்தை மேம்படுத்துவது, அந்த இடத்தின் பெருமையை பறைசாற்றும் கலை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை உருவாக்குவது உள்ளிட்ட பணி களை இந்த தனியார் பெரு நிறுவனங்கள் செய்து தரும்.
நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டம் முடிவடையும் நாளான 2023 ஆக., 15ம் தேதிக்கு முன், தனியார் நிறுவனங்களுடன் 500 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில், 'ஜி - 20' அமைப்பின் மாநாடு, புதுடில்லியில் நடக்கவுள்ள நிலையில், பல்வேறு நாட்டு தலைவர்கள், பிரதிநிதிகள், வி.வி.ஐ.பி.,க்கள் இங்கு வருகை தருவர்.
அவர்களுக்கு நம் கலாசாரத்தை பறைசாற்றும் விதமாக, நம் நினைவுச் சின்னங்களின் தரம் உயர்த்தப்படும்.
![]()
|
'டிஜிட்டல்' அருங்காட்சியகம், கண்காட்சி உள்ளிட்டவை அமைத்து, நம் நாட்டின் 5,000 ஆண்டு கலாசாரத்தை இந்த உலகம் உணர செய்யப்படும்.
குடியரசு தின விழா அணிவகுப்பில், கலாசார துறை சார்பில் பங்கேற்ற அலங்கார ஊர்தி, சக்தி வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக வடிவமைக்கப்பட்டது.
சக்தி வழிபாடு என்பது நாட்டின் அனைத்து பகுதி யிலும் பின்பற்றப்படும் வழக்கம். பெண்களை மதித்து வழிபடுவது நம் கலாசாரத்தின் ஒரு பகுதியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement