வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:
என்.தொல்காப்பியன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருவள்ளூர் மாவட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவிருந்த, வீரவணக்கநாள் நிகழ்ச்சி சம்பந்தமாக ஆய்வு செய்ய சென்ற, பால் வளத் துறை அமைச்சர் நாசர், கட்சிக்காரர்கள் அமர வேண்டிய நாற்காலிகளை கொண்டு வர தாமதம் செய்த தொண்டர் மீது ஆத்திரம் அடைந்து, அவரை தண்டிக்க, சாலையில் கிடந்த கல்லை எடுத்து ஆக்ரோஷமாக எறியும் அற்புதமான காட்சி, பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் வெளியாகி உள்ளது.
தி.மு.க., அமைச்சர்கள் வன்முறை பிரியர்களாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை... தன்னிடம் மனு கொடுக்க வந்த பெண்ணை, அந்த மனுவால், அப்பெண்ணின் தலையில் அடித்து, தன் வீரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டினார், வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன்...
முன்னாள் பிரதமர் இந்திராவையே, மதுரையில் உருட்டுக் கட்டையால் அடித்து, ரத்தம் சிந்தச் செய்தவர்கள் தானே திராவிட செம்மல்கள். தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை, எப்போதும், 'வா... போ...' என்று, ஒருமையில் அழைத்து அழியாப் புகழ் பெற்றவர், அமைச்சர் நேரு...
பஸ்சில் இலவசமாக பயணம் செய்யும் தாய்க்குலங்களை, 'ஓசி கிராக்கிகள்' என்று அழைத்து, அவமானம் செய்தார், அமைச்சர் பொன்முடி. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக, கவர்னர் ரவியை, 'அவன், இவன்...' என்று ஒருமையில் அழைத்து, பெரும் புகழ் பெற்றார், முதல்வர் ஸ்டாலின்.

தொண்டர்களுக்கும், அமைச்சர்களுக்கும், நல்வழி காட்ட வேண்டிய முதல்வரே, மதிப்பு மிக்க கவர்னரை ஒருமையில் அழைத்து இழிவு செய்யும் போது, அமைச்சர் நாசர், ஒரு பேட்டை ரவுடி போல, அப்பாவி தொண்டர் மீது கல் எறிவது, பஞ்சமாபாதகமா என்ன?
தமிழகத்தில் வாரிசு அரசியலை மட்டுமின்றி, வன்முறை அரசியலையும் செழித்து வளரச் செய்த பெருமைக்குரியவர்கள் தான் திராவிட செம்மல்கள். தி.மு.க.,வை துவக்கிய அண்ணாதுரை போற்றிய கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, அமைச்சர் நாசரின் அடாவடிச் செயலால், சந்தி சிரிக்கும் நிலைக்கு வந்து விட்டது.
'தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எக்காரணத்திற்காகவும் பாதிக்கப்படக் கூடாது' என்று காவல்துறை அதிகாரிகளை அறிவுறுத்திய முதல்வர், தன் சக அமைச்சர்களுக்கு, இதை வலியுறுத்திச் சொல்ல மறந்து விட்டார்.
ரவுடிகளை, எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களாக்கி பெருமைப்படுத்திய ஒரே கட்சி, தி.மு.க., தான் என்பதை மறுக்க முடியுமா? அதற்கான சிறந்த உதாரணம்... அமைச்சர் நாசர். 'தமிழ்நாடு அமைதி பூங்கா' என, முழக்கம் செய்யும் முதல்வருக்கு, ஆப்பு வைப்பது போல அமைந்து விட்டது, அமைச்சர் நாசரின் கல்லெறி சம்பவம்!
Advertisement