புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், நிரவி அக்கரைவட்டத்தைச் சேர்ந்தவர் தீனதயாளன், 40. இவரது மனைவி துர்காலட்சுமி, 35. இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு நான்கு மாதத்திற்கு முன் பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்காக தாய் வீட்டில் தங்கியிருந்த துர்காலட்சுமி, சில வாரங்களாக மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு, யாரிடமும் பேசாமல் இருந்துஉள்ளார்.
நேற்று அதிகாலை, 3.௦௦ மணிக்கு, துர்காலட்சுமி, துாங்கிக் கொண்டிருந்த தன் நான்கு மாத பச்சிளம் குழந்தை தனுஸ்ரீயை மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்தார். தொடர்ந்து, அருகில் துாங்கிக் கொண்டிருந்த தாய் வழி பாட்டி வேதவள்ளி, 85, தந்தை பரமசிவம், 75; தாய் தமிழரசி, 65; அண்ணன்கள் ஆண்டவர், 45; நடராஜன், 38; ஆகியோரையும் கத்தியால் சரமாரியாக வெட்டினார்.
பின், அதே கத்தியால் துர்காலட்சுமி தன் கழுத்தை அறுத்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். நடராஜனின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது, பச்சிளம் குழந்தை தனுஸ்ரீ இறந்து கிடந்தது. துர்காலட்சுமி உள்ளிட்ட ஆறு பேரும் ரத்த வெள்ளத்தில் இருந்தனர். அவர்களை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு வேதவள்ளி இறந்தார். மற்ற ஐந்து பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நிதி நிறுவன அதிபர் கடத்தல்; பணம், நகை பறிப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த நாட்டேரியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 46; நிதி நிறுவன உரிமையாளர். இவர், தன் உறவினர்களான சுரேஷ், வடிவேலு ஆகியோருடன் அசனாமாப்பேட்டையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, ராமச்சந்திரன் நிதி நிறுவனத்தை பூட்டி, பைக்கில் பிரம்மதேசம் வழியாக வீட்டிற்கு சென்றார். அவரை பின் தொடர்ந்து சென்ற ஒரு கும்பல், அவரிடம் வழி கேட்பதுபோல் பேச்சு கொடுத்து, அவரை காரில் கடத்தியது.
அப்போது, கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த, 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 2 சவரன் நகையை பறித்துக் கொண்டனர். பின், அவரது தம்பி ரவிச்சந்திரனிடம் மொபைல்போனில் தொடர்பு கொண்டு, ராமச்சந்திரனை கடத்தி வைத்துள்ளதாகவும், 30 லட்சம் ரூபாய் கொடுத்தால் விடுவிப்பதாகவும் மிரட்டினர். பிரம்மதேசம் போலீசில், ரவிச்சந்திரன் புகார் தெரிவித்தார். ராமச்சந்திரனை கடத்தியவர்கள், செல்லும் வழியிலுள்ள புதுார் வனப்பகுதி பாலத்தில் இறக்கிவிட்டு தப்பினர். பிரம்மதேசம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
'போலீஸ்' எனக்கூறி மிரட்டி பணம் பறித்த இருவர் கைது
கோவை, ஒண்டிப்புதுாரில், சிவலிங்கம், 54, என்பவர் பழைய இரும்புக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு, பீளமேடு, அண்ணா நகரைச் சேர்ந்த பூபதி குமார், 49, விருதுநகர் மாவட்டம், சாத்துார், புதுசூரன் குடியைச் சேர்ந்த தங்கமணி, 57, ஆகியோர், போலீஸ் உடை அணிந்து சென்றனர். அப்போது, சிவலிங்கத்திடம், 'கடையில் திருட்டு பொருட்கள் விற்பதாக தகவல் கிடைத்துள்ளது. கைது செய்து சிறையில் அடைத்து விடுவோம்' எனக்கூறி, மிரட்டினர். வழக்கு பதியாமல் இருக்க, 1,000 ரூபாய் தருமாறு கேட்டனர்.
இவர்கள் மீது சந்தேகம் ஏற்படவே சிவலிங்கம், போலீசுக்கு தகவல் அளித்தார். சிங்காநல்லுார் போலீசார் விரைந்து சென்று விசாரித்த போது, இருவரும் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
50 பவுன் கொள்ளை; விபத்தில் சிக்கிய கொள்ளையர்கள் கைது
திருநெல்வேலி, வி.எம்.சத்திரம் அருகே ஜான்சிராணி நகரில் வசிப்பவர் ராமசாமி 44. அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி வனிதா, திருநெல்வேலி தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் இரவு கண்டக்டர், மகன் மகளுடன் வீட்டில் இருந்தபோது வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் அவர்களை தாக்கி கட்டிப் போட்டனர். பீரோவில் இருந்த 50 பவுன் நகைகள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். அப்போது வேலை முடிந்து வனிதா வீட்டுக்கு வந்ததால் கொள்ளையர்கள் பின்வாசல் வழியாக தப்பிச் சென்றனர். இரண்டு டூவீலர்களில் 5 பேர் வந்திருந்தது தெரியவந்தது. வனிதா, கணவர், மகன், மகளை கட்டுகளை அவிழ்த்து விட்டார்.
டூவீலர்களில் தப்பிச் சென்ற கொள்ளையர்கள் நள்ளிரவில் தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை பாலத்தில் செல்லும்போது விபத்துக்குள்ளாகி படுகாயமுற்றனர். காயமுற்ற இருவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு போலீஸ் விசாரணையில் விபத்தில் சிக்கியவர்கள் தூத்துக்குடி கோரம்பள்ளம் முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த முத்து 22, சிலுவை 25 என தெரிய வந்தது. ராமசாமி வீட்டில் கொள்ளையடித்தது இவர்கள் என தெரியவந்தது.
இவர்கள் மீது ஏற்கனவே கொள்ளை வழக்குகள் உள்ளன. இவர்களுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்ட தூத்துக்குடி முத்தையாபுரம் கண்ணன் 20, கிஷோர் டேனியல் 20 ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். கொள்ளைக்கு திட்டம் தீட்டிய நாகர்கோவில் சம்சுதீன் என்பவரை தேடி வருகின்றனர்.
பழங்குடியின சிறுமி கர்ப்பம்; வனக்காவலர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு பகவதி நகரை சேர்ந்தவர் வெள்ளையன், 48, இவர் ராமநாதபுரம் மாவட்ட வனத்துறையில் வன காவலராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த பல மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை. இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்ததால், கணவனை இழந்து 7 குழந்தைகளுடன் தவித்த பழங்குடியின பெண்ணை திருமணம் செய்தார்.

அப்பெண் காட்டு வேலைக்கு செல்லும் நாட்களில், அப்பெண்ணின் 15 வயது மகளுடன் பாலியல் உறவு கொண்டுள்ளார். இதில் அந்த சிறுமி தற்போது 8 மாதம் கர்ப்பமாக உள்ளார். தகவல் அறிந்த விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அந்த சிறுமியிடம் நேரில் விசாரணை நடத்தினார். அவரது புகாரில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளையனை கைது செய்தனர்.
பெண்ணிடம் தகராறு; போலீஸ்காரர் கைது
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்தவர் வெங்கலட்சுமி. நேற்று முன்தினம் இரவு பஸ் ஸ்டாண்டில் உள்ள கடையில் உணவு வாங்க வந்தார். அப்போது விருதுநகர் ஆயுதப்படையில் பணியாற்றி வரும் காரியாபட்டி ஆண்மைபெருக்கியைச் சேர்ந்தவர் மணிமாறன் 35. கடையில்நின்றிருந்த வெங்கலட்சுமியிடம் தகாத வார்த்தையில் பேசி தகராறில் ஈடுபட்டார். காரியாபட்டி போலீசார் மணிமாறனை கைது செய்தனர்.
காதலியை கவர 'பைக்'குகள் திருடிய இளைஞர் கைது
மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக, பல்வேறு இடங்களில் வாகன திருட்டு அதிகரித்து வந்தது. குறிப்பாக, 'பைக்'குகள் காணாமல் போனது குறித்து வந்த புகார்களைத் தொடர்ந்து, மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வந்தனர்.
அப்போது, இரு சக்கர வாகனத்தை திருடிய சுபம் பாஸ்கர் பவார், 19, என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து புனே, சோலாப்பூர், லாத்துார் உள்ளிட்ட பகுதிகளில் திருடப்பட்ட 13 விலை உயர்ந்த பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், தன் காதலியை கவர, சுபம் பாஸ்கர், இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
Advertisement