புதுடில்லி : பெண்கள் சக்தி, 'ஆத்ம நிர்பர்' எனப்படும் தற்சார்பு நிலை, பாரம்பரிய கலாசார பெருமைகளை உணர்த்தும் வகையில், நாட்டின் ௭௪வது குடியரசு தின விழா அணிவகுப்பு நேற்று அமைந்திருந்தது.
முப்படைகளின் தலைவரான ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல் முறையாக குடியரசு தின அணிவகுப்பு மரியாதை ஏற்றதுடன், தேசியக் கொடியையும் ஏற்றி வைத்தார்.
நம் நாடு, 1947 ஆக., 15ல் சுதந்திரம் பெற்றது. அரசியல் சாசனம் தொடர்ச்சி 16ம் பக்கம்
அமலுக்கு வந்த, 1950 ஜன., 26ம் தேதி குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, புதுடில்லியில் ஆண்டுதோறும் பிரமாண்ட கொண்டாட்டம் நடக்கும்.
நம் படைகளின் வலிமையை உலகுக்கு காட்டுவதுடன், நம் நாட்டின் பாரம்பரிய கலாசார பெருமைகளை பிரதிபலிக்கும் வகையில், பிரமாண்ட அணிவகுப்பும் நடத்தப்படும்.
இந்தாண்டு குடியரசு தினவிழாவின் மையப் பொருளாக, 'நாரி சக்தி' எனப்படும் பெண்களின் சக்தியை உணர்த்தும் வகையில் அணிவகுப்பு நடந்தது. மேலும் 'ஆத்ம நிர்பர்' எனப்படும் தற்சார்பு நிலையை உணர்த்தும் வகையில், இந்தாண்டு அணிவகுப்பில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவத் தளவாடங்கள், ஆயுதங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன.
வேற்றுமையில் ஒற்றுமை, நம் பாரம்பரியம், கலாசார பெருமைகளை உணர்த்தும் வகையில், முப்படைகள், மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.
மரபுபடி, பிரதமர் நரேந்திர மோடி, புதுடில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து, ௨௧ குண்டுகள் முழங்க, தேசியக் கொடி ஏற்றப்பட்டது. வழக்கமாக, பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தயாரிக்கப்பட்ட, '௨௫ பவுண்டர் கன்' எனப்படும் பீரங்கி பயன்படுத்தப்படும். ஆனால் தற்சார்பு நிலையை உணர்த்தும் வகையில், இந்தாண்டு, உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள ௧௦௫ மி.மீ., பீரங்கி பயன்படுத்தப்பட்டது.
பெண்களின் சக்தியை உணர்த்தும் வகையில், பெண் ஜனாதிபதியான திரவுபடி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பிரமுகர்கள் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து அணிவகுப்பு துவங்கியது.
வடகிழக்கு ஆப்ரிக்க நாடான எகிப்தின் அதிபர் அப்தெல் பத்தா அல் சிசி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதையொட்டி, அணிவகுப்பில், எகிப்து ராணுவக் குழுவும் பங்கேற்றது. எகிப்து ராணுவத்தைச் சேர்ந்த, 144 வீரர்கள், 'பேண்ட்' இசைக் குழுவுடன் பங்கேற்றனர்.
ஜனாதிபதி மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரையிலான, 8 கி.மீ., நீள ராஜபாதை புனரமைக்கப்பட்டு, 'கர்த்தவ்ய பத்' எனப்படும் கடமை பாதை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதன்படி, கடமை பாதையில் முதல் முறையாக நடந்த இந்த அணிவகுப்பு காலை 10:30 மணிக்கு துவங்கி, மதியம் வரை நீடித்தது.
கடற்படையின் சார்பில் பங்கேற்ற குழுவில், முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆறு ஆண்கள், மூன்று பெண்கள் அடங்கிய 'அக்னிவீரர்கள்' இடம் பெற்றிருந்தனர்.
அணிவகுப்பைத் தொடர்ந்து, விமானப்படையின், 45 விமானங்கள் உள்பட, 50 விமானங்களின் சாகச விண் அணிவகுப்பும் நடந்தது. பனிமூட்டம் காரணமாக இதை பார்வையாளர்கள் முழுமையாக பார்த்து ரசிக்க முடியவில்லை.
முப்படைகளின் சார்பில் நடந்த அணிவகுப்பில், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட தளவாடங்கள், ஆயுதங்கள் இடம்பெற்றிருந்து பார்வையாளர்கள் கவர்ந்தது.
பெண்கள் சக்தி என்பது இந்தாண்டின் மையப் பொருளாக இருந்ததால், விமானப் படையின் 'ஆகாஷ்' ஏவுகணையுடன், லெப்டினென்ட் சேத்னா சர்மா அணிவகுப்பை நடத்தி வந்தார்.
விமானப் படை அணிவகுப்பில், 144 வீரர்கள், நான்கு அதிகாரிகள் குழுவை, ஸ்குவாட்ரன் லீடர் சிந்து ரெட்டி வழிநடத்தினார்.
கடற்படையின், 144 வீரர்கள் அடங்கிய குழுவை, லெப்டினென்ட் கமாண்டர் திஷா அம்ரித் வழிநடத்தினார்.
இந்த அணிவகுப்பில், பரம்வீர் சக்ரா விருது பெற்ற மூவர், அசோக் சக்ரா விருது பெற்ற மூவர் பங்கேற்றனர். இதைத் தவிர முன்னாள் வீரர்கள் குழுவும் அணிவகுப்பில் பங்கேற்றது. அணிவகுப்பில், தமிழகம் உட்பட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஊர்திகள் உட்பட, ௨௩ அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன. நம் நாட்டின் கலாசாரம், பாரம்பரியம், பெண்களின் சக்தி உள்ளிட்டவற்றை விளக்கம் வகையில் இவை அமைந்திருத்தன.
புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்டும், 'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்தின் கீழ் நடக்கும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், கடமை பாதையில் வியாபாரம் செய்யும் பால், காய்கறி மற்றும் தெருவோர வியாபாரிகள் சிறப்பு விருந்தினர்களாக, இந்த அணிவகுப்பை பார்வையிட அழைக்கப்பட்டிருந்தனர்.
இதுபோல் நாடு முழுதும் குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கவர்னர்கள், துணை நிலை கவர்னர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர். இதைத் தவிர, அரசு துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பல்கலை, கல்லூரி, பள்ளி என, நாடு முழுதும் குடியரசு தினம் வழக்கான கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது.
* புதுப்பிக்கப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள கடமை பாதையில் நடந்த முதல் குடியரசு தின விழா இதுவாகும்
* பெண்கள் சக்தி என்ற மையப் பொருளை அடிப்படையாக வைத்து நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
* சிறப்பு விருந்தினராக எகிப்தி அதிபர் பங்கேற்றதால், எகிப்து ராணுவக் குழுவும் அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தது
* பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தானைச் சேர்ந்த வண்ணமிகு தலைப்பாகையை அணிந்திருந்தது கவனத்தை ஈர்த்தது
* துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், மத்திய அமைச்சர்கள், புதுடில்லி துணை நிலை கவர்னர் வி.கே. சக்சேனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்
* பல்வேறு வெளிநாடுகளின் தூதர்களும் அணிவகுப்பை பார்வையிட்டனர்* சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டையொட்டி, சிறுதானியங்களால் வடிவமைக்கப்பட்டுள்ள 'ரங்கோலி' எனப்படும் வண்ணமிகு கோலத்துடன், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் ஊர்தி இடம்பெற்றிருந்தது
* முழுதும் 'சோலார்' எனப்படும் சூரிய எரிசக்தியால் இயங்கும் நாட்டின் முதல் கிராமம் என்ற பெருமையை பெற்றுள்ள மோதராவை குறிப்பிடும் வகையில், குஜராத் மாநில அலங்கார ஊர்தி அமைந்திருந்தது.