டேராடூன் : உத்தரகண்டில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், ஏப்ரல் 27ல் திறக்கப்படும் என பத்ரிநாத் - கேதார்நாத் கோவில் கமிட்டி தெரிவித்துஉள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தின் இமயமலை தொடரில், பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புனித தலங்கள் அமைந்துள்ளன. இங்கு, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
கடும் பனிப்பொழிவு காரணமாக, சமேலி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், கடந்த ஆண்டு நவ., 19ல் மூடப்பட்டது. இந்நிலையில், பத்ரிநாத் கோவில் ஏப்., 27ல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வசந்த பஞ்சமியை முன்னிட்டு, கோவில் திறப்பதற்கான நேரம் மற்றும் தேதி நேற்று தீர்மானிக்கப் பட்டது.
இதன்படி, ஏப்., 27ல் காலை 7:10க்கு கோவில் நடையை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக பத்ரிநாத் - கேதார்நாத் கோவில் கமிட்டி தெரிவித்துள்ளது.