வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோல்கட்டா : மேற்கு வங்கத்தில், எம்.எல்.ஏ., ஒருவரின் கால்களை, பெண் கவுன்சிலர் 'மசாஜ்' செய்யும் புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவியதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுஉள்ளது.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, இக்கட்சியின் எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் அசித்.
சமீபத்தில், கட்டிலில் படுத்திருக்கும் இவரது கால்களை, பெண் கவுன்சிலரான ரூமாராய் பால் பிடித்துவிட்டு மசாஜ் செய்கிறார்.
இந்த புகைப்படத்தை, அவரே சமூக வலைதளத்தில் பகிர்ந்ததுடன், 'இதற்கு தலைப்புகள் தேவை இல்லை. அவர் என் கடவுள், வழிகாட்டி. அவருக்கு சேவை செய்வதன் வாயிலாக, என்றென்றும் நன்றி உள்ளவளாக இருக்கிறேன்' எனவும் பதிவிட்டுஉள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி, மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு, பல்வேறு தரப்பினர் கடும் விமர்சனங்களை பதிவிட்டுள்ளனர்.
'திரிணமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும், தலைவர்களும் அக்கட்சியினரை அடிமை போல் நடத்துகின்றனர்' என பா.ஜ.,வினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த அசித், ''சமீபத்தில் எனக்கு அறுவைச் சிகிச்சை நடந்தது. அதில் இருந்து நான் இன்னும் குணமடையவில்லை. இதனால், அவர் என்னை ஒரு மூத்த சகோதரனை போல் கவனித்தார்,'' என விளக்கம் அளித்து உள்ளார். இருப்பினும், இப்பிரச்னை மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.