ஜபல்பூர் : மத்திய பிரதேசத்தில், 20 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலித்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் முனிஷ்வர் சந்தாவர், 77, பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாட்டின் 74வது குடியரசு தினத்தை ஒட்டி, நம் நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகள், 106 பேருக்கு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. இதில், ம.பி., மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த டாக்டர் முனிஷ்வர் சந்தாவர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
நம் அண்டை நாடான பாக்.,கில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் பிறந்த இவர், இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., முடித்து, 1972 முதல் மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். துவக்கத்தில், 2 ரூபாய்க்கு சிகிச்சை அளிக்கத் துவங்கியவர், தற்போது, நோயாளிகளிடமிருந்து 20 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலித்து வருகிறார். இந்தியா - பாக்., போரின் போது இந்திய ராணுவத்திலும் சந்தாவர் பணியாற்றியுள்ளார்.
விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து டாக்டர் சந்தாவர் கூறியதாவது:
சேவை செய்வதே ஒரே நோக்கம் என்பதால், சிகிச்சைக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை. கடின உழைப்பு சில சமயங்களில் தாமதமாக பலன் தரும். இது, மக்களின் ஆசீர்வாதத்துடன் தற்போது கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
'அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே விருதுகள் வழங்கப்படுவதாக நினைத்தோம். ஆனால், உழைக்கும் மக்களையும் அரசு கவுரவிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது' என சந்தாவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.