காரைக்கால்-மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட பெண், அதிகாலையில் ஆடிய கொலை வெறி தாண்டவத்தில், அவரது பச்சிளம் குழந்தை மற்றும் பாட்டி கொல்லப்பட்டனர். தாய், தந்தை உள்ளிட்ட 5 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், நிரவி அக்கரைவட்டம் பகுதியை சேர்ந்தவர் தீனதயாளன்,40. இவருக்கும், நெடுங்காடு கொம்யூன் நல்லாத்துார் மேலப்படுகையை சேர்ந்த பரமசிவம் மகள் துர்காலட்சுமி,35; என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு நான்கு மாதத்திற்கு முன் பெண் குழந்தை பிறந்தது.
பிரசவத்திற்காக தாய் வீட்டில் தங்கியிருந்த துர்காலட்சுமி, கடந்த சில வாரங்களாக மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு, யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 3.௦௦ மணிக்கு, துர்காலட்சுமி, அயர்ந்து துாங்கிக் கொண்டிருந்த தனது 4 மாத பச்சிளம் குழந்தை தனுஸ்ரீயை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்தார்.
தொடர்ந்து, அங்கு துாங்கிக் கொண்டிருந்த தாய் வழி பாட்டி வேதவள்ளி,85, தந்தை பரமசிவம்,75; தாய் தமிழரசி,65; அண்ணன்கள் ஆண்டவர்,45; நடராஜன்,38; ஆகியோரையும் கத்தியால் சரமாரியாக வெட்டினார்.
பின்னர் அதே கத்தியால் துர்காலட்சுமி தனது கழுத்தை அறுத்துக் கொண்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
இந்நிலையில் நடராஜனின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது, பச்சிளம் குழந்தை தனுஸ்ரீ ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது.
துர்காலட்சுமி உள்ளிட்ட 6 பேரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு பாட்டி வேதவள்ளி இறந்தார். மற்ற 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நெடுங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, துர்காலட்சுமி பயன்படுத்திய மண்வெட்டி மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர்.
மேலும், இதுகுறித்து கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Advertisement