வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை அறிவிப்பதில், பா.ஜ., தாமதம் செய்வது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு, பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், வரும் 31-ல் துவங்குகிறது.
தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் சார்பில் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
அ.தி.மு.க.,வில் பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பினரும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர். இரு தரப்பும் பா.ஜ.,விடம் ஆதரவு கேட்டுள்ளன.
அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி தரப்புக்கு ஆதரவளிக்க, பா.ஜ, முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை சூசகமாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஆனாலும், முடிவை அறிவிப்பதில் பா.ஜ., தாமதம் செய்து வருவது, பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
![]()
|
இது தொடர்பாக, பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது: இடைத்தேர்தலில் த.மா.கா., வேட்பாளரை, தாமரை சின்னத்தில் போட்டியிட வைக்க, பா.ஜ., மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை.
இந்த இடைத்தேர்தலை, தங்கள் பலத்தை நிரூபிக்கும் களமாக பழனிசாமி நினைக்கிறார். போட்டியிடுவதில் உறுதியாக உள்ள அவர், அதற்கான வேலைகளை துவங்கி விட்டார்.
அதனால் தாமும் போட்டியிட வேண்டிய கட்டாயத்திற்கு பன்னீர்செல்வம் தள்ளப்பட்டுள்ளார். அ.தி.மு.க., பிளவுபட்டு இருந்தாலும் பழனிசாமி தரப்பிடம் தான் அதிக நிர்வாகிகள் உள்ளனர். எனவே, அவருக்கு ஆதரவளிக்கலாம் என, பா.ஜ., தலைவர்களில் ஒரு பிரிவினர் கூறுகின்றனர்.
இரு தரப்பில் யாரை ஆதரித்தாலும், லோக்சபா தேர்தலில் சிக்கலை ஏற்படுத்தும் என, பா.ஜ., மேலிடம் நினைக்கிறது. அதனால், பா.ஜ.,வை ஆதரித்து வரும் பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில், தமிழக தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் தான் தாமதம். ஆனாலும், ஓரிரு நாளில் இடைத்தேர்தல் நிலைப்பாட்டை, அண்ணாமலை அறிவிப்பார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement