சென்னை: 'பறவை மனிதர்' என்று அழைக்கப்படும் கூந்தன்குளம் பால்பாண்டி, கவர்னரின் விருந்தினராக கவுரவிக்கப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் ஆர்வலராக அறிமுகமாகி, வேட்டை தடுப்பு காவலராக மாறியவர் பால்பாண்டி, 67. பறவைகள் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக ஈர்க்கப்பட்டு, கூந்தன்குளம் சரணாலயத்தில் பணியில் சேர்ந்தார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக, கூந்தன்குளம் பறவைகள் சரணாலய பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
கூந்தன்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில், பறவைகளின் வருகையை அதிகரிக்க, 1,600க்கு மேற்பட்ட மரங்களை நட்டு வளர்த்து வருகிறார். வலசை வரும்போது பாதிக்கப்பட்ட 4,000 பறவைகளை மீட்டு, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
தன்னார்வ அமைப்புகள் வாயிலாக, 74 விருதுகளை பெற்றுள்ள இவரை மையப்படுத்தி, 17 ஆவணப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவரை, குடியரசு தின தேனீர் விருந்துக்கு அழைத்து, கவர்னர் ரவி கவுரவப்படுத்தி உள்ளார்.