கூடலுார்: முதுமலையில், வளர்ப்பு யானைகள் அணிவகுத்து நிற்க, தேசியக்கொடி ஏற்றி குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில், நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
வளர்ப்பு யானைகள் வரிசையாக அணி வகுத்து நிற்க, அதன் மீது பாகன்கள் தேசியக் கொடி ஏந்தி அமர்ந்திருந்தனர்; வன ஊழியர்கள் அணிவகுத்து நின்றனர்.
முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா தேசியக் கொடி ஏற்றினார். வன ஊழியர்களுடன், வளர்ப்பு யானைகளும் துதிக்கையை உயர்த்தி, தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார், வனச்சரகர்கள் விஜய், மனோஜ்குமார், கணேசன், சதாம் உசேன் கான், வன ஊழியர்கள், யானை பாகன்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.