தொண்டாமுத்தூர்: ''நம்மிடம் இருக்கும் வேறுபாடுகளை கடந்து, எது நம்மை ஒன்றாக வைத்துள்ளது என்பதை, நீங்கள் கண்டறிந்து, அதை மேலும் பலப்படுத்த வேண்டும்,'' என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வலியுறுத்தியுள்ளார்.
ஈஷா அறக்கட்டளை சார்பில், கோவை ஈஷா யோகா மையத்தில், குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தலைமை வகித்து தேசியக்கொடி ஏற்றினார். ஈஷா சமஸ்கிருதி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் பள்ளி மாணவர்கள், தேச பக்தி பாடல்களை பாடினர்.

சத்குரு பேசியதாவது:
நம்மிடம் எவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும், நாம் அனைவரும் பல நூறு ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகிறோம்.
சுதந்திரத்திற்கு முன், நம் தேசத்தை, 600க்கும் மேற்பட்ட குறுநில அரசர்கள் ஆட்சி செய்து வந்தனர். இருப்பினும், வெளியில் இருந்து வந்தவர்கள் அனைவரும், நம்மை 'இந்துஸ்தான்' அல்லது 'பாரதம்' என்று ஒற்றை பெயர் வைத்தே அழைத்தனர்.
நம்மிடம் இருக்கும் இந்த பன்மைத்துவத்தையும், வேறுபாடுகளையும் பயன்படுத்தி, நமக்குள் பிரிவினையை உருவாக்கும் செயல்கள், கடந்த, 600 முதல் 700 ஆண்டுகளில் மிகவும் தீவிரமாக நடந்துள்ளன. நம் தேசத்தின் மீது படையெடுத்தவர்களும், ஆக்கிரமித்தவர்களும் இதை பல வழிகளில் மிகவும் திட்டமிட்டு செய்துள்ளனர்.
குறிப்பாக, நம் தேசத்தின் பொருளாதார முதுகெலும்பை தகர்ப்பதற்கும் அவர்கள் செயல் செய்துள்ளார்கள்.
300 ஆண்டுகளுக்கு முன் வரை, உலகளவில் பொருளாதாரத்தில் வளமான தேசமாக நம் பாரத தேசம் இருந்தது. அந்நிலையை மீண்டும் அடையும் முயற்சியில், நாம் தற்போது ஈடுபட்டு உள்ளோம். பொருளாதார பலம் இல்லாமல் கலாசாரம், ஆன்மிக விழுமியங்கள் என, நாட்டில் உள்ள எதையும் நம்மால் பாதுகாக்க முடியாது.
மேலும், நம்மிடம் இருக்கும் பலவிதமான வேறுபாடுகளை கடந்து, எது நம்மை ஒன்றாக வைத்துள்ளது என்பதை, நீங்கள் கண்டறிந்து அதை மேலும் பலப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.