புதுச்சேரி: மரபு மீறல், அரசியலமைப்பு சட்டமீறல் என அனைத்து மீறல்களிலும் தெலுங்கானா அரசு ஈடுபட்டு வருகிறது' என, கவர்னர் தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று புதுச்சேரி ராஜ்நிவாசில் நிருபர்களிடம் கூறியதாவது:
குடியரசு தினவிழாவை சிறப்பாக நடத்திய புதுச்சேரி அரசை பாராட்டுகிறேன். தெலுங்கானா முதல்வர் என்னை புறக்கணிப்பது புதிதல்ல. தெலுங்கானா அரசு குடியரசு தினவிழாவை குறைத்து மதிப்பிட்டு, அரசாங்க விழாவாக நடத்தாமல், அரசிடமிருந்து எந்த அறிவிப்பு வராமல், அவர்களும் எங்கும் கொடி ஏற்றாமல் செயல்பட்டனர்.
இதுகுறித்து பொதுமக்களில் ஒருவர் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தெலுங்கானா அரசுக்கு கடுமையான கண்டத்தை தெரிவித்த நீதிமன்றம், குடியரசு தினவிழாவை முழுமையாக நடத்த உத்தரவிட்டது.
ஆனால், நேரம் குறைவாக இருந்ததால் அரசு குடியரசு தின விழாவை நடத்த முடியவில்லை என தெரிவித்துவிட்டது. என்னால் தேசியகொடிக்கு என்ன மரியாதை செய்ய முடியுமோ, அதை செய்துவிட்டு சிறப்பாக செயல்பட்ட 6 பேருக்கு விருது வழங்கினேன். கவர்னர் மாளிகையில் குடியரசு தினவிழா நடத்தியதற்கான காரணத்தை தெலுங்கானா முதல்வரிடம் தான் கேட்க வேண்டும். மரபு மீறல், அரசியலமைப்பு சட்டமீறல் என அனைத்து மீறல்களிலும் தெலுங்கானா அரசு ஈடுபட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசுக்கு தகவல் அனுப்பியுள்ளேன்.
இவ்வாறு கவர்னர் கூறினார்.