சென்னை: 'வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால், இன்று(ஜன.,27) 3 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை குறையும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
மிதமான மழை
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பூமத்திய ரேகையை ஒட்டிய, இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதி மற்றும் அதையொட்டிய தென் கிழக்கில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில், இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.
இது, அடுத்து வரும் மூன்று நாட்களில், மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் மெதுவாக நகரும். இதனால், தமிழக கடலோரம், அதையொட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், தமிழகம், புதுச்சேரியில், இன்று வறண்ட வானிலை நிலவும். ஓரிரு இடங்களில் காலை நேர வெப்ப நிலை இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் குறைவாக பதிவாகும்.
![]()
|
சூறாவளி
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் இன்றும்; தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில், வரும் 29, 30ம் தேதியிலும் மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.