வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோல்கட்டா: கடந்த 72 ஆண்டுகளாக முடித்து வைக்கப்படாமல் நீண்டு கொண்டே இருந்த, நாட்டின் மிக பழமையான வழக்கு விசாரணை, கோல்கட்டா நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்தது.
மேற்கு வங்கத்தில் கோல்கட்டாவைச் சேர்ந்த, பெர்ஹாம்பூர் வங்கி திவாலானதை தொடர்ந்து, அந்த வங்கியை கலைக்க, 1948 நவ., 19ல் கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, 1951, ஜன., 1ல் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு முடித்து வைக்கப்படாமல், கடந்த 72 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது.
கோல்கட்டா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தற்போது பதவி வகித்து வரும் பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா பிறப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன் பதிவான இந்த வழக்கு, தற்போது வரை முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே இருந்தது.
வங்கி கலைப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த ஆண்டு செப்., மாதம் இருமுறை விசாரணைக்கு வந்தது. அப்போது யாருமே வழக்கில் ஆஜராகவில்லை. இதையடுத்து, இந்த வழக்கு குறித்து அறிக்கை அளிக்குமாறு, வங்கி கலைப்பு அதிகாரிக்கு நீதிபதி ரவி கிருஷ்ண கபூர் உத்தரவிட்டார்.
![]()
|
நாட்டின் மிக பழமையான மேலும் நான்கு வழக்குகளில் இரண்டு வழக்குகள் கோல்கட்டா நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.