இந்தியாவின் ஜவுளித்துறையில், தமிழகத்தின் பங்களிப்பு, மூன்றில் ஒரு பங்காகவுள்ளது. பருத்தி உற்பத்தி, ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வந்தாலும், நுால் உற்பத்தியில் தமிழகம் இன்னும் முன்னணியில் உள்ளது. அரை கோடி மக்களுக்கு மேல் வேலை வாய்ப்பை வழங்கும் தமிழக ஜவுளித்துறை, ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடிக்கு அந்நியச் செலாவணியையும் ஈட்டித்தருகிறது.

தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில்தான் அதிகளவிலான நுாற்பாலைகளும் (மில்) உள்ளன. உள்நாட்டு வர்த்தகத்திலும், வெளிநாட்டு ஏற்றுமதியிலும் இந்த நான்கு மாநிலங்களின் பங்களிப்பே அதிகம். அதிலும் தமிழகமே முதலிடத்தில் உள்ளது. தமிழகத்திலுள்ள, 700க்கும் அதிகமான மில்களில், ஒன்றரை கோடி கதிர்கள் இருக்கின்றன.
குஜராத்தில் மில்களின் எண்ணிக்கை 70க்கும் குறைவாக இருந்தாலும், கதிர்களின் எண்ணிக்கை 37 லட்சம் அளவில் உள்ளது. ஆந்திராவிலுள்ள 100க்கும் மேற்பட்ட மில்களில், 35 லட்சம் கதிர்களும், தெலங்கானாவிலுள்ள 30க்கும் அதிகமான மில்களில், 10 லட்சம் கதிர்களும் இருப்பதால், நான்கு மாநிலங்கள்தான் நுால் உற்பத்தியில் முன்னிலை வகிக்கின்றன.

இந்திய ஜவுளித்துறை வளர்ச்சியடைந்து வந்தாலும், மிகவும் சிறிய நாடுகளான வங்கதேசம், வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகள், ஜவுளி ஏற்றுமதியில் நமக்குப் பெரும் சவால்களாகவுள்ளன. ஜவுளி உற்பத்திக்கான மூலப்பொருட்களான பருத்தி, விஸ்கோஸ் மற்றும் பாலியெஸ்டர் போன்றவற்றை கொஞ்சமும் உற்பத்தி செய்யாத இந்த நாடுகள், ஏற்றுமதியில் சாதனை படைத்து வருகின்றன.
வரி விதிப்பிலுள்ள வித்தியாசம், ஏற்றுமதிக்கான ஒப்பந்த நடைமுறைகள், நவீனமயமாக்கல், கூட்டு முயற்சி என இதற்குப் பல காரணங்கள் உள்ளன. கோவையில் இயங்கி வரும் இந்திய ஜவுளித்தொழில் முனைவோர் கூட்டமைப்பு (ஐ.டி.எப்.,), இந்திய ஜவுளித்துறையில் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து, இதை மேம்படுத்துவதற்கான பல்வேறு முன்னெடுப்புகளையும் தொடர்ந்து செய்து வருகிறது.
பங்கேற்ற அமைப்புகள்!
ஜவுளி உற்பத்தியைப் பொறுத்தவரையில், ஒரு நிறுவனத்துக்கான தனித்துவம் என்பது ஐந்து சதவீதமாக மட்டுமே உள்ளது. மற்றபடி, உற்பத்தித் திறன், மூலப்பொருட்கள் விலை, பருத்தி விலை மற்றும் வரத்தின் போக்கு போன்ற, 95 சதவீதமான தகவல்களும், நடைமுறைகளும் பொதுவானதாகவே உள்ளன. ஆனால் பல கட்டங்களில் பங்கேற்கும் துறை சார்ந்தவர்களின் அறிவும், பார்வையும் வெவ்வேறாகவுள்ளன.
இந்தத் தகவல்களையும், அன்றாட மாற்றங்கள், முன்னேற்றங்களையும் பகிர்ந்து, கூட்டாகச் சேர்ந்து சில முயற்சிகளைச் செய்யும்போது, ஒட்டு மொத்த ஜவுளித்துறையையும், ஏற்றுமதியையும் முன்னேற்றலாம் என்ற நோக்கோடு இந்த அமைப்பு செயல்படுகிறது. இதற்காக, இத்துறையில் பங்களிக்கும் பல்வேறு மாநிலங்களின் தொழில் முனைவோரையும் ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா மற்றும் குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களைச் சேர்ந்த மில் உரிமையாளர்கள் பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியை, கோவையில் கடந்த வாரத்தில் இந்த அமைப்பு நடத்தியது.
கோவை லீ மெரிடியன் ஓட்டலில் நடந்த இந்த கலந்துரையாடலில், ஆந்திரா ஸ்பின்னிங் மில் அசோசியேஷன், தெலங்கானா ஸ்பின்னிங் மில் அசோசியேஷன், குஜராத் ஸ்பின்னிங் மில் அசோசியேஷன் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.டி.எப்., அமைப்புகளைச் சேர்ந்த 120 பேர் பங்கேற்றனர்.
42 மில் உரிமையாளர்கள்
வெளிமாநிலங்களிலிருந்து வந்திருந்த 42 மில் உரிமையாளர்கள், தமிழகத்திலுள்ள பல்வேறு மில்களையும், ஆயத்த ஆடை நிறுவனங்களையும் முதல் நாளில் நேரில் பார்வையிட்டனர். இரண்டாம் நாளில், கலந்துரையாடலில் பங்கேற்று, தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மில் உரிமையாளர்களும் அந்த கலந்துரையாடலில் தெரிவித்த கருத்துகள்:
சலபதி ராவ், நிர்வாக இயக்குனர், பாச்சலா ஸ்பின்டெக்ஸ், ஆந்திரா: பருத்தி விவசாயிகளில் ஆரம்பித்து, ஜவுளித்துறையில் பங்கேற்றுள்ள அனைவருமே 'கமாடிட்டி' சந்தைகளில் நடக்கும் மாற்றங்களை கூர்ந்து கவனித்து, அதற்கு ஏற்றார்போல், தினசரி சந்தைக்கு அவர்கள் கொண்டு வரும் பருத்தியின் அளவையும், விலையையும் மாற்றும் நிலை உள்ளது. இந்த மாற்றங்களை, தொழில் துறையினரான நாம் புரிந்து செயல்பட வேண்டியது அவசியம்.
சுசில், ஸ்ரீராம் ஸ்பின்னர்ஸ், ஹைதராபாத்: செயற்கை பஞ்சு சார்ந்த ஆடை ரகங்களுக்கு எல்லா சந்தைகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக, வெளிநாடுகளில் இத்தகைய ஆடைக்கான ஆர்டர்களும் அதிகமாகக் கிடைக்கின்றன. எனவே, அதற்கான ஒட்டு மொத்த கட்டமைப்பை உருவாக்கும் வகையில், நாம் அனைவரும் கூட்டு முயற்சியாக இணைந்து கிளஸ்டர்களை மேம்படுத்தலாம்.
ரிப்பில் படேல், குஜராத்: உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்தில் அவ்வப்போது ஏற்படும் உறுதிப்படுத்தப்படாத வதந்திகளால், நம் உற்பத்தி பொருட்களுக்கு திடீரெனவும், கடுமையாகவும் விலை வீழ்ச்சி ஏற்படுகிறது. இம்மாதிரியான கூட்டு முயற்சியில் தரவுகள் மற்றும் புள்ளி விபரங்களை ஆதாரப்பூர்வமாக உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளும்போது, அத்தகைய பாதிப்புகளை வெகுவாகக் குறைக்க முடியும். குஜராத் மாநிலத்தில் இருந்து பருத்தி சம்பந்தமான தகவல்களை, நாங்கள் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளோம்.
எம்.கே. அகர்வால், சூரியலதா ஸ்பின்னிங் மில்ஸ், ஹைதராபாத்: பருத்தி விளைச்சல் மற்றும் உற்பத்தி குறித்த சரியான தகவல்கள், புள்ளி விபரங்கள் உரிய நேரத்தில் நமக்கு கிடைப்பதில்லை. இந்த தகவல்கள் சரியாக இல்லாததால் ஏற்படும் குழப்பங்களை சரி செய்ய நாம் அனைவரும் சேர்ந்து முயற்சி எடுக்கலாம். சரியான 'டேட்டா'க்கள் மட்டுமே யூக வணிகத்தை கட்டுப்படுத்தி ஜவுளித் தொழிலில் ஒரு ஸ்திரத்தன்மையை கொண்டு வரும்.
நிதாந்த் படேல், குஜராத்: நுாற்பாலைகள், நுால் உற்பத்தியோடு நிறுத்தாமல், சாயம் ஏற்றப்பட்ட துணிகள் உற்பத்தி மற்றும் ஆயத்த ஆடை தயாரிப்பு என்று ஒரே கூரையின்கீழ் உற்பத்தியை மேம்படுத்த, அடுத்த கட்ட முதலீடுகளைச் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளது. இந்த முயற்சிகளை இப்போதே துவக்கினால்தான், அடுத்த ஏழாண்டுகளில் நமது ஒட்டுமொத்த ஏற்றுமதியையும் அதிகரிக்க முடியும்.
ஆனந்த், வாசு யார்ன் மில்ஸ், தமிழகம்: பருத்தி விலையில் ஏற்படும் மாற்றங்களை, பருத்தி விளையும் மாநிலங்களில் இருப்போர் துல்லியமாக கணக்கிடுகிறார்கள் என்பதையும், அவர்களின் பருத்தி மற்றும் நுால்கள் கையிருப்பு சம்பந்தமான கொள்கைகள் காலத்துக்கு ஏற்றார்போல மாறியுள்ளது என்பதை இக்கூட்டத்தின் மூலம் உணர முடிந்தது. இந்த கூட்டு முயற்சியால், நாம் பருத்தி சம்பந்தமான சரியான தகவல்களை பெற வாய்ப்பு இருக்கிறது.
இளங்கோ, சங்கீத் டெக்ஸ்டைல்ஸ், தமிழகம்: ஏற்றுமதியில் தமிழகம் மற்றும் குஜராத் ஆலைகள், அதிக அளவில் மேற்கொள்வதால், தரம் மற்றும் விலை சம்பந்தமான தரவுகளைப் பரிமாறுவதன் மூலம், நல்லஸ்திரத் தன்மையை கொண்டு வர முடியும். பருத்தியின் தரத்தை உயர்த்துவதற்கும், அதன் தொடர்ச்சியாக நுால், துணிகள் மற்றும் ஆடைகளின் தரத்தை அதிகரிக்க நாம் கூட்டு முயற்சியை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மில் உரிமையாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
இந்திய ஜவுளித் தொழில் முனைவோர் கூட்டமைப்பு எடுக்கும் இந்த கூட்டு முயற்சி, செயல் வடிவம் பெறும் போது, இந்த ஆண்டிலிருந்து இந்திய பருத்தி உற்பத்தியின் தரமும், ஜவுளி ஏற்றுமதியும் அதிகரிக்குமென்று, கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற தொழில் முனைவோர் பலரும் நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.
மாசில்லா பருத்தி... பேஷான நுால்!
ஆந்திராவைச் சேர்ந்த ஆர்.கே. அகர்வால் பேசுகையில், ''சில நுால் மில்கள், சில குறிப்பிட்ட ஜின்னர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுடன் சேர்ந்து, பருத்தியின் மாசுபாட்டைக் குறைத்து, தரமான பஞ்சை உற்பத்தி செய்து, அதன் மூலமாக நுாலின் தரத்தையும், உற்பத்திச் செலவையும் குறைத்துள்ளனர். இந்த முயற்சி பரவலாக்கப்பட வேண்டும்.'' என்று கோரிக்கை விடுத்தார். இந்த முயற்சியை மில் உரிமையாளர்கள் பலரும் பாராட்டி, இதே கருத்தை வலியுறுத்தினர்.
இதுகுறித்து இந்திய ஜவுளித் தொழில் முனைவோர் கூட்டமைப்பு (ஐ.டி.எப்.,) கன்வீனர் பிரபு தாமோதரன் கூறுகையில், ''ஜின்னிங் ஆலைகளில் உள்ள பேல் பிரஸ்ஸிங் மெஷின்களில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் மாதிரி திட்டத்தை தெலங்கானா மாநிலத்தில் பரிட்சார்த்த முறையில் அமல்படுத்தி, அம்மாநில நூற்பாலை சங்கம் முயற்சி எடுத்தால் அதற்கான முழு ஒத்துழைப்பையும் ஐ.டி.எப்., வழங்கும். விஞ்ஞானபூர்வமான தரவுகளுக்கு இது வழிவகுக்கும்,'' என்றார்.
சீனாவுக்கு ஏற்றுமதி அதிகரிக்கும்!
தமிழகத்தைச் சேர்ந்த டி.ஆர்.கே.டெக்ஸ்டைல்ஸ் சரவணன் பேசுகையில், ''சீனாவில் ஜவுளிப் பொருட்கள் கையிருப்பு குறைந்து, விரைவில் சில்லறை விற்பனைச் சந்தை முழுமையாக திறக்கப்படவுள்ள நிலையில், வரும் மாதங்களில் சீனாவுக்கு நுால் மற்றும் துணி ஏற்றுமதி அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது,'' என்று நம்பிக்கை தெரிவித்தார்.ஆந்திராவை சேர்ந்த பவன் குமார் கூறுகையில் , ''உற்பத்தி மற்றும் உற்பத்தி செலவு சார்ந்த தகவல்களை, நான்கு மாநில மில்களும் ஒப்பீடு செய்யும்போது, ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த தரவரிசையை அறிமுகப்படுத்தி, மற்றவர்களும் அதே முயற்சியைத் தொடரலாம். நான்கு மாநில நூற்பாலை உரிமையாளர்களும் பயன்படுத்தும் படியான ஒரு செயலியை உருவாக்கினால் நன்றாயிருக்கும்,'' என்றார்.
-நமது சிறப்பு நிருபர்-