நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி
ஈரோடு இடைத்தேர்தல் களம் எனக்கானது; அதில் வெற்றி பெறுவது உறுதி. தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுகள் அதிகரித்து வருவது, எங்களுக்கு சாதகமாக இருக்கும். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர், வரும், 29ல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளார்.
'களம் என்னுடையது' என இப்ப முழங்குபவர், கடைசியில, 'கட்டுத்தொகை' அதாங்க, 'டிபாசிட்'டாவது தேறுமாங்கிற சூழலுக்கு வந்துடுவார் பாருங்க!

தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
'ஓசி பயணம்' என, தரக்குறைவாகப் பேசிய பஸ் கண்டக்டர், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அப்படி தரக்குறைவாக பேசிய, அமைச்சர் பொன்முடியை ஏன் நீக்கவில்லை; சம நீதி இல்லையா? அமைச்சருக்கு ஒரு நியாயம், அரசு ஊழியருக்கு ஒரு நியாயமா?
சர்ச்சையான அமைச்சர்களை எல்லாம் நீக்கணும்னா, ஸ்டாலின் அமைச்சரவையில் யாருமே இருக்க மாட்டாங்களே!
அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் அறிக்கை
'இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., போல புதுமண தம்பதி இருக்கக் கூடாது' என, அமைச்சர் உதயநிதி பேசி உள்ளார். தி.மு.க.,வை போல, மன்னர், பட்டத்து இளவரசர் வழியில், மனைவி, துணைவி எனும் திராவிட மாடல் வேண்டாம் என்பதே, சரியான அறிவுரையாக இருக்கும்.
'வெறும் வாயை மெல்பவர்களுக்கு அவல் கொடுத்த மாதிரி ஆகிடுச்சு பாருங்க, அ.தி.மு.க.,வின் இன்றைய நிலைமை!
தமிழக காங்., - எஸ்.சி., பிரிவு மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் அறிக்கை
அரக்கோணம் பகுதியில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி தலைவர் கீதாவை செயல்பட விடாமல், துணைத் தலைவர் நடந்து கொண்டது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. தென்காசி அருகே ஊத்துமலை ஊராட்சி தலைவர் வளர்மதி, பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி உள்ளார். உள்ளாட்சி அமைப்புகளில், சில ஜாதிய சக்திகளால் நடத்தப்படும் அநீதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க முதல்வர் உத்தரவிட வேண்டும்.
சட்டசபை காங்., குழு தலைவர் செல்வப்பெருந்தகை, இதைப் பற்றி எல்லாம் சட்டசபையில் பேசாம, ஆளுங்கட்சிக்கு, 'ஜால்ரா' தட்டிட்டு தானே இருக்கார்!
அ.தி.மு.க., முன்னாள் நிர்வாகி,'ஆவின்' வைத்தியநாதன் அறிக்கை
'அ.தி.மு.க.,வுக்கு ஜென்ம எதிரி அமைச்சர் பொன்முடி. ஜெயலலிதாவை மிக கேவலமாக பேசியவர். அவரோடு கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது' என, முன்னாள் அமைச்சர் சண்முகத்தை, ஜெயலலிதா உயிரோடு இருந்த போது எச்சரித்திருந்தார். சமீபத்தில் பொன்முடி சகோதரர் மறைவுக்கு, சண்முகம் நேரில் ஆறுதல் கூறியுள்ளார்; அப்படி என்றால் அவர்களுக்குள் ரகசிய உறவு இருக்கிறது. ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால், பொன்முடி வீட்டிற்கு சண்முகம் போயிருப்பாரா?
துக்கம் விசாரிக்க கூட, எதிர்க்கட்சியினர் வீட்டுக்கு போகக்கூடாதுஎனக் கூறுவது குரூரம் இல்லையா?